மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்வு நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்வு நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் வான் நோக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, வான் நோக்கும் நிகழ்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பேசியதாவது, அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களால் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்த தொலைநோக்கி மூலம் வானில் அற்புதங்களைக் காணும் வான்நோக்கும் நிகழ்வு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஓபன் ஸ்பேஸ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொலைநோக்கி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வானின் அற்புதங்களைக் காணும் மிகப்பெரிய ஒரு வாய்ப்பினை இப்பள்ளிக் குழந்தைகள் பெற்றுள்ளனர். ஓபன் ஸ்பேஸ் அறக்கட்டளைக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பள்ளி மாணவி வரவேற்புரை ஆற்றியது இப்பள்ளியின் கல்வியின் தரத்தினை உணர்த்துகிறது. பொதுவாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியைத் தவிர பிற போட்டிகளில் அதிகம் பங்கு பெறும் வாய்ப்பு தனியார் பள்ளிகளில் கூடுதலாக இருக்கும். எனினும் அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற வாய்ப்புகளை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தலாம் என்பதற்கு இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், அனைவருக்கும் வானை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே இதுகுறித்து அறிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வருங்காலங்களில் மேதகு டாக்டர்.அப்துல் கலாம் அவர்களை போல விஞ்ஞானிகளாக உருவாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 


சமூகத்திற்கு தேவையான இது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் முக்கியமாகும். இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப கல்வி பயில்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும்.


மேலும், அரியலூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக தொலைநோக்கி மூலம் வான் நிகழ்வுகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பு இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகாமை பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்டுகளிக்கும் வண்ணம் தொலைநோக்கி ஆனது பள்ளி வளாகத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வினை அனைவரும் கண்டு களிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அம்பிகாபதி, தலைமையாசிரியர் ஹேமலதா, பெற்றோர் ஆசிரிய கழகத்தினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/