புதுக்கோட்டையில் இன்று தமிழ் வளர்ச்சித் துறையால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டையில் இன்று தமிழ் வளர்ச்சித் துறையால் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டிகள்.

புதுக்கோட்டை, முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி மா. மஞ்சுளா அவர்கள் பரிசு வழங்கினார்கள். நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையால் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பெற்று வருகின்றன.

அவ்வகையில், 2023-24ஆம் ஆண்டுக்கு அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன.


புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி மா. மஞ்சுளா அவர்கள் தலைமையேற்று, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்கள்.  முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசு இருவருக்கு தலா ரூ.2000 என பரிசுத்தொகை வழங்கப்பெற்றன.  முதன்மைக்கல்வி அலுவலர், போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  


மேலும், மாணவர்களின் பேச்சாற்றலை வெளிக்கொணரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்துகொள்வதே மாணவர்கள் வெற்றியை நோக்கி வைக்கும் முதல்அடி என்றும், வெற்றி-தோல்வி இரண்டையும் ஏற்கும் மனநிலையை மாணவச்செல்வங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தோல்வி கண்டு துவளாமல் தோல்விக்கான காரணங்களை அறிந்து அவற்றைக் களைந்து வெற்றிபெற முயல வேண்டும் எனவும் தெரிவித்தார்.


முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர். சாலை செந்தில் அவர்கள் வரவேற்புரையாற்றி போட்டி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.  தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஜ. சபீர்பானு அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன.  பணிநிறைவு பெற்ற தமிழாசிரியர் திரு. கும. திருப்பதி, பொன்னமராவதி, முத்தமிழ்ப்பாசறைத் தலைவர் திரு. நெ.இரா. சந்திரன், முதுகலைத் தமிழாசிரியர்கள் திரு. பாலசுப்ரமணியன், திரு. பரமசிவம் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.


அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு முற்பகல் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வடவாளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச. சந்தியா முதல் பரிசும், புதுக்கோட்டை, கற்பக விநாயகா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஹ. தேஜஸ்வினி இரண்டாம் பரிசும்,, புதுக்கோட்டை, திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. கௌசிகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசுக்கு கறம்பக்குடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. பரமளேஸ்வரி மற்றும் மண்ணவேளாம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி க. சங்கீதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பெற்றனர்.


முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி  பிறந்தநாளை முன்னிட்டு பிற்பகல் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் சுப்பிரமணியபுரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. ஸ்ரீநிஷா முதல் பரிசும், விராலிமலை, விவேகா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி சி. நிரஞ்சனா இரண்டாம் பரிசும், இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மு. தாமரைச் செல்வி மூன்றாம் பரிசும் பெற்றனர்.  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப்பரிசுக்கு அன்னவாசல், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரெ. சுவாதி மற்றும் திருமயம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.நி. பைஜியத்துல் தௌபிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


நிறைவாக இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  திருமதி தமிழரசி அவர்கள் நன்றியுரையாற்ற போட்டிகள் இனிதே நிறைவுற்றன.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad