திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 26). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கௌரி(24). இவர்களுக்கு ஷிவானி(4) என்ற மகள் உள்ளார். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர்.
அப்போது மல்லிகாவின் உறவினர்களான திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(31) மற்றும் அவருடைய மனைவி கீர்த்திகா(23) ஆகிய இருவரும் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது சிறுமி ஷிவானியுடன் கீர்த்திகா நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி மல்லிகாவின் வீட்டிற்கு வந்த ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி ஷிவானியை தங்களுடன் ஊருக்கு அழைத்துச் சென்று சிறிது நாள் வைத்திருந்து விட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கௌரிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் பரிதாபப்பட்ட கௌரி தனது ஒரே மகள் ஷிவானியை அவர்களுடன் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியை ஊருக்கு அழைத்து வந்த ராஜேஸ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து வடமதுரை போலீசார் ராஜேஷ்குமார், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கீர்த்திகா ஆகிய இருவர்மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் S.P.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் டிஎஸ்பி.துர்காதேவி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள், ராஜேஷ் குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளிப்பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக