தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டு வேலைக்கான போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூபாய் 2½ லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட எதிரி கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி, கடந்த 2021ம் வருடம் விளாத்திகுளம் பூசனூர் பகுதியை சேர்ந்த அருளப்பன் மகன் எபனேசர் (45) என்பவர் விளாத்திகுளம் வி. வேடப்பட்டி பகுதியை சேர்ந்த தாழைச்சாமி மகன் தாளமுத்து (31) என்பவரிடம் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியதை நம்பி மேற்படி தாளமுத்து எபனேசரிடம் ரூபாய் 40,000/- பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் மேற்படி எபனேசர் தாளமுத்துவுக்கு வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி தாளமுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார். இதனையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி எபனேசரை இன்று கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தாளமுத்து இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்களிடம் தலா ரூபாய் 40,000/- பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டு வேலைக்கான போலியான பணி நியமன ஆணையை கொடுத்து மொத்தம் ரூபாய் 2,40,000/-பணம் மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக