தாராபுரம் அருகே டயர் வெடித்து 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரையைச் சேர்ந்தவர்கள் கிருபாகரன் (வயது 24), சஞ்சய் (24). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர்கள் இருவரும் நேற்று தங்களது உறவினர் சந்திரன் (60) என்பவருடன் ஒரு காரில் மதுரையில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தனர். இவர்களுடைய கார் தாராபுரம்-திருப்பூர் நான்கு வழிச்சாலையில் கோனாபுரத்தில் மதியம் 3 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு மற்றொரு கார் வந்தது. இந்த காரில் தாராபுரத்தில் விதை பண்ணை நடத்தி வரும் ஆத்துக்கால் புதூரை சேர்ந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகிய இருவரும் இருந்தனர். இவர்களுடைய காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பாய்ந்து கல்லூரி மாணவர்கள் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் 2 கார்களின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. கார்களில் இருந்த 5 பேரும் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக