பத்திரிகையாளர்களின் உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவுள்ள மாநாடு' - தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹரன் பேச்சு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பத்திரிகையாளர்களின் உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவுள்ள மாநாடு' - தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹரன் பேச்சு.

'பத்திரிகையாளர்களின் உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவுள்ள மாநாடு' - தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹரன் பேச்சு.


அக்டோபர் 29-ஆம் தேதி உதகையில் நடைபெறவுள்ள தமிழக பத்திரிகையாளர்களின் முதல் மாநில மாநாடு பத்திரிகையாளர் சமூகத்தின் உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதோடு, ஜனநாயகத்தில் அவர்களது தேவையை அனைத்துத் தரப்பினருக்கும் உணர்த்துவதாக அமையும் என்று தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹரன் பேசினார்.


மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் எதிரேயுள்ள நூற்றாண்டு பாரம்பரியப் பெருமை வாய்ந்த யூனின் கிளப்பில் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு குறித்த நிர்வாகிகள் அளவிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற தீ விபத்து மற்றும் உயிர்ப்பலி சம்பவம் காரணமாக கூட்டம் சற்று காலதாமதமாக காலை 11 மணியளவில் துவங்கியது. 


தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் இரா.சிவக்குமார் அனைத்து நிர்வாகிகளையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில், சங்கத்தின் முதல் மாநில மாநாடு உதகையில் மிகச் சிறப்பாக நடைபெறும் வகையில் பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது நிர்வாகிகள் மட்டத்திலான ஆலோசனைக்கூட்டம் குறுகிய காலத்தில், நமது மதுரை மண்டலத் தலைவர் திரு சண்முகம், தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில முதன்மை செய்தித் தொடர்பாளர் ஆதவன் ஆகியோரின் கடும் முயற்சியால் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இந்த மாநாட்டை ஆகச் சிறந்த வகையில் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டு முயற்சியோடு மேற்கொள்ள வேண்டும் என்றார். ஆலோசனைக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக அண்மையில் காலமான நியூஸ் 7 மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித், ஈடிவி பாரத் சென்னை செய்தியாளர் லெனின் ரெட்சகநாதன், புதிய தலைமுறையின் நெல்லை ஒளிப்பதிவாளர் சங்கர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 


பிறகு நடைபெற்ற கலந்துரையாடலில், உதகையில் நடைபெறும் முதல் மாநில மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கும் ஏற்பாடு வரவேற்புக்குரியதாகும். பிற பத்திரிகையாளர் சங்கங்கள் எவையும் இதுபோன்ற முன்னெடுப்பை செய்யாத நிலையில், தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் இம்முயற்சி, சமூகப் பணிகளில் உள்ளபடியே சிறந்து விளங்குவதோடு, இதுவரை அங்கீகாரம் பெறாதவர்களுக்கான வடிகாலாகவும் இந்த விருது அமையும் என பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 


பல்வேறு பணிகளின் அடிப்படையில் தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்து வரும் பத்திரிகையாளர்கள் இன்னமும் அங்கீகரிக்கப்படாத நிலை உள்ளது. பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்தாலும், அதன் செயல்பாடுகள் போதுமான அளவில் வரையறுக்கப்படவில்லை. அத்துடன் அந்த வாரியத்தின் குறைந்தபட்ச பலன்களும்கூட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்காத நிலை உள்ளது ஆகையால் இதுகுறித்த அறிவிப்பும் மாநாட்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 


அதேபோன்று மாநாடு என்பது கூட்டு முயற்சி. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் பத்திரிகையாளர்களின் பணிகள் குறித்து வெளியே தெரிய வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் ஒவ்வொருவரும் மாநாட்டின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என வருகை புரிந்த அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.


அனைத்து நிர்வாகிகளின் கருத்துரைகளுக்குப் பிறகு மாநிலத் தலைவர் ஹரிஹரன் பேசும்போது, 'அக்டோபர் 29-ஆம் தேதி உதகையில் நடைபெறவுள்ள தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு பத்திரிகையாளர் சமூகத்தின் உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதோடு, ஜனநாயகத்தில் அவர்களது தேவையை அனைத்துத் தரப்பினருக்கும் உணர்த்துவதாக அமையும். மேலும் தற்போது சங்கத்திற்கென்று எந்தவித நிதியாதாரமும் இல்லாத நிலையில், நன்கொடை மற்றும் விளம்பரக் கட்டணங்கள் மூலமாகவே ஈடு செய்ய வேண்டிய தேவையுள்ளது. 


ஒவ்வொரு மாவட்டமும் தத்தமது பகுதியில் வாய்ப்புள்ள நன்கொடை மற்றும் விளம்பரம் வழங்கும் நிறுவனங்கள், தனிநபர்கள், அரசியல்வாதிகள், புரவலர்களைக் கண்டறிந்து அவர்களிடம் கேட்டுப் பெற வேண்டும். மேலும் இதுபோன்ற எந்த நன்கொடைகளும் இன்றியே நமது மாநாட்டை நாம் நடத்தி விடலாம். ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் நமது சங்கத்திற்கான நிதியாதாரத்தை உறுதி செய்ய முடியும் என்பதை அனைவரும் உணருவது அவசியம். அதேபோன்று மாநாட்டிற்காகப் பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் முழுவதுமாக கணக்கில் கொண்டுவரப்பட்டு, வெளிப்படையாக அறிவிக்கப்படும். 


இந்த வெளிப்படைத்தன்மைதான் நம் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும். மாநாட்டுப் பணிகளுக்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்தக் குழுக்களின் மாநிலப் பொறுப்பில் உள்ளோர், மாவட்ட நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் வழி நடத்துவர். தமிழக பத்திரிகையாளர் சங்கத்தின் முழுப் பரிமாணமும் தமிழகத்திலுள்ள அனைத்துத் துறையினருக்கும் தெரியப்படுத்த இந்த மாநாடு ஒரு தூண்டுகோலாக அமையும். ஓரிருவர் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பணி அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டியது என்பதாலும், நாட்கள் மிகக் குறைவாக உள்ளதாலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் திட்டமிட்டு இந்தப் பணிகளை எத்தனை விரைவாக செய்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்ய வேண்டும். 


அதேபோன்று விருதுக்கான தகுதியானவர்கள் மாவட்ட வாரியாக இருவர் அல்லது மூவர் தேர்வு செய்யப்படுவர். அவர்களை மிகுந்த பொறுப்போடு அழைத்து வர வேண்டியது மாவட்ட நிர்வாகிகளின் கடமை. விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற நபர்கள் மட்டுமே தங்களின் குடும்பத்தாருடன் வருவதற்கு அனுமதி உண்டு. தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நாம் அழைக்கவுள்ளோம். இதில் எந்த பாகுபாடும் இல்லை. முதல் மாநாட்டை எந்த அளவிற்கு வெற்றிகரமாக நடத்த இயலுமோ அந்த அளவிற்கு வெற்றிகரமாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்' என்றார்.


மாநில முதன்மை செய்தித் தொடர்பாளர் ஆதவன், ஆலோசனைக் கூட்டத்தை நெறிப்படுத்தினார். மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள், அதன் விபரங்கள், செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார். மாநாட்டு மலர் அதில் இடம்பெறக்கூடிய கட்டுரைகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவை குறித்தும் விரிவாக அலசி ஆராயப்பட்டது.  நிறைவாக அனைவருக்கும் நன்றி கூறிய தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன், மதுரையில் தொடங்கப்படுகின்ற எந்த விசயமும் அதில் வெற்றியில்தான் முடியும் என்பது அரசியல்கட்சிகளிலிருந்து தமிழ் சினிமா வரை நிதர்சனமான உண்மை. அந்த வகையில் நிர்வாகிகளுக்கான இந்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் தொடங்கியிருப்பது, மிகப் பெரும் வெற்றிக்கான அறிகுறியே. பத்திரிகையாளர் சமூகத்தின் மேன்மைக்கான அடித்தளம் என்பது எத்தனை அவசியமோ, அதைவிட அவசியம் அவர்களின் ஒருங்கிணைப்பு. அதனை நமது சங்கமும், அதன் முதல் மாநாடும் நிச்சயம் சாத்தியமாக்கும் என்று பலத்த கரவொலியுடன் பேசிய அவர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 


ஆலோசனைக்கூட்ட அரங்கு மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான வகையில் மேற்கொண்ட மதுரை மண்டலத் தலைவர் சண்முகத்தை அனைத்து நிர்வாகிகளும் மனமுவந்து பாராட்டினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோத் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சௌந்தர், முத்துக் காமாட்சி, பாண்டியராஜன், விவேக், மோகன் கணேஷ், சரவணன், வேளாங்கண்ணி, ஞானபாஸ்கர், ராஜேஷ், பால் வாசகம், அலெக்ஸாண்டர், தங்கராஜ், கேசவன், ராஜேஷ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், திருமலை சீனிவாசன், கதிரேசன், மைதீன் சாகுல்ஹமீது, செல்வ சரவணன், ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்றபின், சங்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் சகாயராஜா அவர்களின் தாயார் இறப்புக் குறித்து, மதுரை கடச்சனேந்தலில் உள்ள அவரது இல்லத்திற்கு நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று துக்கம் விசாரித்தனர். அந்த நிலையிலும்கூட, மாநாட்டை வெகு சிறப்பாக நடத்தவும், தமிழகம் முழுவதுமிருந்து வருகை தருகின்ற அனைவரையும் உள்ளன்போடு வரவேற்றுச் சிறப்புச் செய்ய நீலகிரி மாவட்டம் முழுமனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளது என சகாயராஜா தெரிவித்தது நிர்வாகிகளை நெகிழ்ச்சியடைச் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad