திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, ஜன 11, தமிழகத்தில் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் கூடிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒரு சேர கொண்ட ஒரே இயக்கம் திமுக என்று அரசியல் வட்டாரத்தில் மாற்று கட்சியினரும் திமுகவை பாராட்டுவதுண்டு.
திமுகவின் அரசியல் பயணத்தில் நெல்லை மாவட்ட திமுக முக்கிய பங்காற்றிய வேளையில் அதன் சறுக்கலுக்கும் அவ்வப்போது இடமளித்துள்ளது. இதை தான் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அடிக்கடி "நெல்லை என்றாலே தொல்லை தானா?"என்று அடிக்கடி நகைச்சுவை உணர்வோடு குறிப்பிடுவோர். இதை தான் இன்றளவும் நெல்லை மாவட்ட திமுக தலைமைக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே வருகிறது. தலைமைக்கு "அழுத்தம் கொடுப்பதாக"நினைத்து கொண்டு உள்ளூரிலேயே சொந்த கட்சியினரை தலைமைக்கு எதிராக மடைமாற்றம் செய்யும் பணியை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்வது "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க போன்றது" என்ற வழக்கச் சொல்லுக்கு இணையானது. நெல்லை திமுகவில் மாநகராட்சி மக்கள் பிரதிநிதி பதவிகளை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அலங்கரித்திருந்தால் இந்த தொல்லை ஏற்பட்டிருக்காது. மாறாக மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாப் எம் எல் ஏ தனக்கு வேண்டியவர்களுக்கும், தனது ஒப்பந்தத்துக்கு உட்பட்டவர்களுக்கும் பதவிகளை விலை பேசி விற்றதாகவும், அதனாலேயே இன்று நெல்லை திமுகவில் கமிஷன் சண்டையில் பொது வெளியில் பட்டவர்த்தனமாக ஈடுபட்டுள்ளதாக கட்சியினர் புலம்பல். அந்த பங்கு சண்டையின் உச்ச கட்டமே நாளை(12-01-2024) நெல்லை மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான கவுன்சில் கூட்டம்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதை கட்சி தலைமை விரும்பவில்லை என்பதை தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட திமுக மேலிட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நேரடியாக நெல்லை வந்து வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்களை அழைத்து கட்சி தலைமையின் விருப்பத்தை (நம்பிக்கை இல்லா தீர்மானம் கவுன்சில் கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணிக்க வேண்டும்) தெரிவித்து ஒவ்வொரு திமுக கவுன்சிலருக்கும் "பொங்கல் படி"யாக தலா ரூ.1 லட்சம் வழங்கி சென்றுள்ளதாக தகவல். ஏற்கனவே கடந்த தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக நடந்த கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்ட அரங்கிற்குள் கூட்டம் தொடங்க குறிப்பிட்டிருந்த காலை 10 மணிக்கு செல்லாமல் சுமார் 4 மணி நேரம் கழித்து "தீபாவளி போனஸ்" ஆக ஒவ்வொரு கவுன்சிலரும் தலா ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு அரை மணி நேரத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றி விட்டு சென்றதாகவும் செய்தி. இந்த தடவை பொங்கலுக்கு 4 நாட்கள் முன்னதாகவே "பொங்கல் போனஸ்" பெற்றிருந்தாலும் கடந்த 2 வருடங்களாகவே மேயரை பழித்து பேசி பழகிய திமுக கவுன்சிலர்களுக்கு போனஸ் திருப்தி இல்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் திமுக தலைமை விருப்பத்திற்கு மாறாக மேயர் சரவணனின் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.2 லட்சம் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை (12ந்தேதி) நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் வெற்றி பெற போவது லகரங்களா? அல்லது ஆளும் கட்சி (தலைமை கழக நிர்வாகிகள்) சிகரங்களா? என்பது தெரியும். இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கி தவிப்பது மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே. எனவே நெல்லை திமுகவின் உடனடி தேவையாக நடுநிலையுடன் கூடிய மாவட்ட அளவில் அனைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் அரவணைத்து செல்லும் மாவட்ட செயலாளரே தேவை என்பதை இங்குள்ள ஆளும் திமுகவினர் நன்கு உணர்ந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக