தூத்துக்குடி மாவட்டம், பிப்.14, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு.
ஸ்ரீவைகுண்டம் அருகே, கொங்கராயகுறிச்சி சிவன் கோயில் தெருவை சேர்ந்த வீரபாண்டி மகன் பிச்சையா (55) என்பவரை கடந்த 10.03.2015 அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கொங்கராயகுறிச்சி மணல்மேட்டு தெருவைச் சேர்ந்த அருள்ராஜ் (எ) அருளப்பன் மகன் அந்தோணிராஜ் (எ) அந்தோணி (42), கொங்கராயகுறிச்சி மூர்த்தி நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராபின் (26), கொங்கராயகுறிச்சி கீழத்தெருவை சேர்ந்த ராமசுப்பு மகன் ரவி (49), கொங்கராயகுறிச்சியை சேர்ந்த நல்லதம்பி மகன் அன்பு பட்டுராஜ் (எ) பட்டுராஜ் (43) உட்பட 11 பேரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரணை செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் புலன் விசாரணை செய்து கடந்த 17.06.2015 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் நேற்று (14.02.2024) குற்றவாளிகளான அந்தோணிராஜ் (எ) அந்தோணி, ராபின், ரவி மற்றும் அன்பு பட்டுராஜ் (எ) பட்டுராஜ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்தும், மற்றவர்களை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சந்திரா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக