பிளாஸ்டிக் அன்று வரம் இன்று சாபம் மஞ்சூர் பள்ளியில் கருத்தரங்கு.
மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நீலகிரி மாவட்டம் முன்னெடுத்துள்ள 'காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 -25 ' என்ற திட்டத்தின் அடிப்படையில் பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரு. சீனிவாசன் மற்றும் திரு. பாபி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் திட்ட இயக்குனருமான கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறிய கருத்துக்கள்..... 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனால் அவர் கதை முடிந்து விட்டது என்று பொருள் . அந்த சமயத்தில் லியோ பாக் லேண்ட் என்ற மருத்துவர் பீனால் என்ற வேதிப்பொருளை கண்டுபிடித்தார். அதனை ஒரு நோயாளியின் உடல் முழுவதும் தடவிய போது அந்த நோயாளி உயிர் பிழைத்துக் கொண்டார். நோயாளிகளின் உயிரைக் காத்த அந்த வேதிப்பொருள் பின்னர் பத்து அவதாரங்களை எடுத்தது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பினாயில் வெடி மருந்து, நாம் உண்ணும் வெண்ணிலா ஐஸ்கிரீம் என பல அவதாரங்களை எடுத்து பத்தாவது அவதாரமாக தான் பிளாஸ்டிக் பிறந்தது. அந்தக் காலத்தில் பேனா, சிகரெட் ஆஸ்ட்ரே, பில்லியர்ட்ஸ் பந்து போன்ற பல பொருட்களை யானை தந்ததால் செய்திருந்தனர். இதற்காக 1830 முதல் 1840 குள் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட யானைகள் தந்தத்திற்காக கொல்லப்பட்டன. பின்னர் அன்றைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூலம் இத்தகைய பொருட்களை செய்தனர். இதனால் லட்சக்கணக்கான யானைகள் காப்பாற்றப்பட்டன. அப்பொழுது பிளாஸ்டிக் மனித குலத்திற்கு ஒரு வரம் என மக்களால் கருதப்பட்டது. ஆனால் இன்று பிளாஸ்டிக் ஒரு சாபம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்து குவிக்கிறார்கள். இதில் 80 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் குப்பைகள் ஆகியுள்ளன. பெரும்பாலான பிளாஸ்டிக்பைகள் ஒரு லட்சம் வருடம் ஆனாலும் கூட அழியாது. பூமியின் பரப்பில் 40% தற்போது பிளாஸ்டிக் குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. கடல் பரப்பிலும் பிளாஸ்டிக் குப்பைகள் ஒவ்வொன்றும் ஒரு தீவு போல குவிந்துள்ளன. பிளாஸ்டிக்கே ஒரு நச்சு வேதி பொருள். அதனுடன் பனிரெண்டாயிரம் வேதிப்பொருட்கள் சேர்த்து இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இதில் நூற்றுக்கும் குறைவான பிளாஸ்டிக்கின் பின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வேதிப்பொருட்கள் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பது குறித்து எந்த ஆய்வுகளும் இல்லை. மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் தாய்ப்பால், மனித விந்தணுக்கள், ரத்தம் போன்ற பல பொருட்களில் காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்திலேயே தடை விதித்தால் மட்டுமே பிளாஸ்டிக்குகளை ஒழிக்க முடியும். பன்னாட்டு பெட்ரோலியம் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் தயாரிக்கும் போது உண்டாகும் கழிவு பொருளான இந்த பிளாஸ்டிக் பொருட்களிலும் பணம் பார்ப்பதால் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது உலக அளவில் காணல் நீராகவே உள்ளது. ஒவ்வொரு தனி மனிதரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். சிக்கன் மட்டன் சாப்பிட வேண்டும் என்றால் கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டால் சுவையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அதையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு போன் செய்வது மூலம் வாங்கி சாப்பிடும் போது ஒருவர் சாப்பிட்ட அளவைவிட இரண்டு மடங்கு பிளாஸ்டிக் குப்பைகளை வீசி எரிகிறார். கடைக்குப் போகும் போது பையை எடுத்துச் சென்றால் பூமி தாய் மகிழ்வாள். காலநிலை மாற்றத்தில் பிளாஸ்டிக்கும் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே பிளாஸ்டிக் இன்று மனித குலத்திற்கு ஒரு சாபமாக தான் இருக்கிறது என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார். முன்னதாக ஆசிரியர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியை சாந்தி ஆகியோர் அனைவரையும் வரவேற்றன ர். ஆசிரியர் சகாய் மற்றும் சாந்தி ஆகியோர் நன்றி கூறினார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக