கண்காணிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி!
உலகப் புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலில் பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் தரிசனத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் 100 ரூபாய் கட்டன தரிசனத்தில் நின்ற கோவையைச் சேர்ந்த காவலர் ஒருவர் மாற்று வழியில் சென்று கோவிலுக்குள் செல்ல முயன்றுள்ளார். அதை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பணியிலிருந்த பெண் கண்காணிப்பாளர் விஜயலெட்சுமி தடுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது காவலர் கையில் வைத்திருந்த செல்போனை கண்காணிப்பாளர் விஜயலெட்சுமி பறிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த காவலர் விஜயலெட்சுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.
விஜயலெட்சுமியின் கையை முறுக்கி தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
உடனே பணியில் இருந்தவர்கள் கோவில் வாகனத்தில் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கண்காணிப்பாளரை தாக்கியதாக கூறி கோவையைச் சேர்ந்த கார்த்திக் என்ற காவலரையும் அவருடன் வந்த மற்றொரு காவலர் நாகராஜ் என்பவரையும் போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை.
திருச்செந்தூர் கோவிலில் கோவில் பெண் கண்காணிப்பாளரை காவலர் தாக்கியதில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக