பேராவூரணி பேரூராட்சி நிர்வாக ஊழலை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பேராவூரணி பேரூராட்சி நிர்வாக ஊழலை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

 


பேராவூரணி பேரூராட்சி நிர்வாக ஊழலை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்


ஜன.5 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், பேரூராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அதிமுக சார்பில் பேராவூரணி வேதாந்தம் திடலில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சி.வி.சேகர் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் கல்யாணஓடை துரை.செந்தில், மாநில விவசாய அணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான


மா.கோவிந்தராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இதில், மாநில அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.


அவர் பேசுகையில், "பேரூராட்சி மன்றத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, அதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, நீதிமன்றம் ஆறு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 


பேரூராட்சி தலைவர் சாந்தியின் கணவர் என்.எஸ்.சேகர் திமுக நகரச் செயலாளர், மாமனார் என்.செல்வராஜ் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர், இருவரும் அரசு ஒப்பந்ததாரர்கள், உள்ளாட்சிப் பணியில் இருப்பவர்களின உறவினர்கள் ஒப்பந்தப் பணிகளை செய்யக்கூடாது என்ற விதிமுறை, இருந்தும் அதை மீறி பல ஒப்பந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். பணிகளை முடிக்காமலே பணத்தை எடுத்து பல கோடி முறைகேடு செய்துள்ளனர். நீதிமன்றத்தை மதிக்காத திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அதிமுக சார்பில் அடுத்த கட்ட போராட்டத்தை தொடர்வோம்" என்றார் 


முன்னதாக அதிமுக நகரச் செயலர் எம்.எஸ். நீலகண்டன் வரவேற்றார். பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.இளங்கோ நன்றி கூறினார். 


மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், எதையும் கண்டு கொள்ளாத திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad