உலக ஈர நில நாள் கருத்தரங்கு மற்றும் இயற்கை முகாம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள லாங்வுட் சோலையில் உலக ஈர நில நாள் கருத்தரங்கு மற்றும் இயற்கை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசு வனத்துறை கோத்தகிரி வனச்சரகம் மற்றும் 'காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல்- பசுமை நீலகிரி' திட்டத்தின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமது தலைமை உரையின் போது லாங் வுட் சோலையின் சிறப்பு அம்சங்களை குறித்து விரிவாக பேசினார். சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே. ராஜு அவர்கள் கூறிய கருத்துக்கள்.....
1971 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஈரான் நாட்டிலுள்ள ராம்சார் என்ற நகரத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் மகாநாட்டில் உலக அளவில் உள்ள அனைத்து ஈரநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் வண்ணமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாம் தேதி உலக ஈர நில நாள் என கொண்டாடப்படுகிறது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் ராம் சார் சைட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் லாங் வுட் சோலையும் ஒரு ராம்சார் சைட் என கடந்த ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய ஈர நிலங்கள் காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் கார்பனை உறிஞ்சிக் பூமி சூடாவதை தடுக்கின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏராளமான ஈர நிலங்கள் அழிந்து போய் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த இருநூறு ஆண்டுகளில் 5000 திற்கும் மேற்பட்ட சிறு ஓடைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் காணாமல் போய் உள்ளன என ஒரு ஆய்வு கூறுகிறது. உலக அளவில் ஈர நிலங்கள் 40% வரையான பல்லுயிர் சூழல்களை கொண்டுள்ளன. இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தான் பூமியை காக்கும் கடைசி முயற்சிகள் என்பன போன்ற பல கருத்துக்களை ராஜு கூறினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேசிய பசுமை படைத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அவர்கள் பேசும்போது லாங் வுட் சோலை போன்ற காடுகள் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு மண்டலமாக அமைந்துள்ளன. ஏராளமான மூலிகை செடிகள் மருத்துவ குணம் மிக்க இலைகள் வேர்கள் பட்டைகள் போன்றவை இத்தகைய காப்புக்காடுகளில் ஏராளமாக காணப்படுகின்றன. குறிப்பாக புற்றுநோயை குணப்படுத்தும் ருபூஸ் போட்டிடா என்ற தாவரம் பரவலாக காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதனைப் போன்ற பல கருத்துக்களை கூறினார். மேலும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ன மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இளம் விஞ்ஞானி ஜனார்த்தனன் மாணவர்களிடையே மேகங்களின் தன்மையை கண்டறிதல், காற்றின் அழுத்தம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கண்டறியும் நவீன கருவிகளுடன் மாணவர்களிடையே ஆய்வுகள் செய்து காட்டினார். மேலும் ஒவ்வொரு நாளும் நாசாவினுடைய செயற்கைக்கோள் உதகைக்கு நேராக வரும்பொழுது தட்பவெட்ப வேறுபாடுகளை பதிவு செய்யும் முறைகளையும் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளின் தன்மை பற்றி அறியும் அறிவியல் பரிசோதனைகளை நவீன கருவிகள் மூலம் செய்து காட்டினார். முன்னதாக கோத்தகிரி அரிமா சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர ரெட்டி, கோவை மாவட்ட அரிமா சங்க உறுப்பினர்கள், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி சார்பாக பேராசிரியர் முனைவர் லீனா விதை பந்துகளை மாணவர்களுக்கு வழங்கினார். குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி, கோத்தகிரி மெட்ராஸ் கிருத்துவ கல்லூரியின் கிளை நிறுவனமான சமுதாயக் கல்லூரி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். முன்னதாக வனவர் முருகன் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் லாங்வுட் சோலையில் ட்ரக்கிங் மேற்கொண்டனர். மாணவர்களுக்கு வனத்துறை சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக