பேராவூரணி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களில் ரயில் நின்று செல்ல ரயில்வே அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்
பேராவூரணி, ஏப்.24 - புது டெல்லி ரயில்வே பவனில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில், பாஜக தேசிய கவுன்சில் உறுப்பினர் தங்க.வரதராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெய் சதீஷ், பேராவூரணி ரயில் பயணிகள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் சொ.மெய்ஞானம், திருச்சி கோட்ட DRUCC உறுப்பினர் அதிராம்பட்டிணம் அப்துல் ரஜாக், தஞ்சாவூர் ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் ரேவந்த் குமார், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சரத் ஆகியோர் நேரில் சந்தித்து இப்பகுதி ரயில்வே வளர்ச்சி சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது, "தற்போது புதிதாக இயக்கப்பட்டு வரும் தாம்பரம் - ராமேஸ்வரம் - பாம்பன் புதிய விரைவு ரயில் (16103/16104) பேராவூரணி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ரயில் நிலையங்களில், இரண்டு நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.
மயிலாடுதுறை- காரைக்குடி ரயில் பாதையில் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
காலை நேரத்தில் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல மயிலாடுதுறையில் சோழன் அதிவிரைவு ரயிலுக்கு (22675/22676)இணைப்பு ரயிலாக தெற்கு ரயில்வேயால் 2022 ஆம் ஆண்டு முன் மொழிவு செய்யப்பட்ட காரைக்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயிலை (16858/16860) இயக்க வேண்டும்.
திருவாரூர் காரைக்குடி (06197/06198)பயணிகள் ரயில் மற்றும் திருவாரூர் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் (06851/06852) ஆகியவற்றை மெயின் லைனில் தொடர்ந்து பயணம் செய்ய வசதியாக மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து இயக்க வேண்டும்.
செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை (07695/07696) நிரந்தரமாக இயக்க வேண்டும்.
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை (06070/06069) மீண்டும் இயக்க வேண்டும்.
தென் மாவட்டங்களுக்கு சென்று வர மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை, உடனே பரிசீலித்து நிறைவேற்றித் தருவதாக, ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக, ராமேஸ்வரம் -பேராவூரணி -பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் வழியாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டு தற்போது சில ஆண்டுகளாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவு ரயில்கள் பேராவூரணி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பலனளிக்காமல், ஏறக்குறைய 5 லட்சம் மக்கள் பாதிப்படைவதாக, அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக