தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டிணம் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு மையக் கட்டடம் கட்டுவதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூரில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடத்தினை திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,01,80,000/- மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகர நகரில் தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மாநகராட்சி நூலக வரித் தொகையிலிருந்து ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படவுள்ள மாவட்ட நூலகக் கட்டடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், புதிதாக கட்டப்படவுள்ள மாவட்ட நூலகக் கட்டடம் 33,500 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் அமையவுள்ளது. மேலும், இக்கட்டடத்தில் இளைய தலைமுறையினர், மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான ஆராய்ச்சிக் கூடமாகவும், கலைநிகழ்ச்சிக்கான அரங்கமும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிவருபவர்களுக்கான வகுப்பறைகளும், ஒரே நேரத்தில் சுமார் 250 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையிலும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்கு ஏற்றார்போலும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமையவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் அவர்கள். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவ ஆனந்தி, காயல்பட்டிணம் நகர்மன்றத் தலைவர் திரு.முத்து முஹம்மது, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், வட்டாட்சியர்கள் பாலசுந்தரம் (திருச்செந்தூர்), செல்வக்குமார் (ஏரல்), காயல்பட்டிணம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக