தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், கானம் கிராமத்தில் இன்று (24.05.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.51,95,053 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது:- இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு திரளாக வந்திருக்கக்கூடிய ஊர் பொதுமக்களே ஊடக நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் மாவட்ட தலைநகரிலிருந்து மிகவும் தொலைதூரத்தில் உள்ள கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து,
அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று பல்வேறு விதமான குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின கோரிக்கை மனுக்களை பெறக்கூடியது. கடந்து ஒரு ஆண்டாக நடைபெறக்கூடிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களிளெல்லாம் ஆய்வு செய்து அங்கும் மனுக்களை பெறக்கூடிய திட்டம், அதன்பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாம்களை அமைத்து அதன்மூலம் மனுக்களை பெறக்கூடிய திட்டம்.
இப்படி பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்த்துறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
அதனடிப்படையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் 112 பெறப்பட்டு, அவற்றை முழுமையாக பரிசீலனைசெய்து அதில் 96 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்ட வகையிலும், அதற்கு பின்னர் கானம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான வகையிலும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்படவுள்ளது.
தகுதியின்மை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களின் மனுதாரர்களுக்கு எதற்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
அதன்படி, இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில், வருவாய் துறையின் மூலமாக 2 பயனாளிகளுக்கு குடியிருப்பு பட்டாக்களும், 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 பயனாளிகளுக்கு பட்டா பெயர் சேர்க்கப்பட்ட கூட்டுப்பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு பட்டா பெயர் நீக்கம் செய்யப்பட்டு தனிப்பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு தனிப்பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைகளையும், 10 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4,00,000க்கான விவசாய காசுக்கடனுதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.1,00,000க்கான மத்திய கால கடனுதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.21,37,000க்கான விவசாய கூட்டு பொறுப்பு குழு கடனுதவிகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.6,05,000க்கான கால்நடை பராமரிப்புக் கடனுதவிகளையும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,00,000க்கான கடனுதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3053 மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 1 பயனாளிகளுக்கு கைபேசி மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் சுயதொழில் தொடங்க ரூ.5,00,000க்கான வங்கி கடனுதவியும், கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் 1 பயனாளிகளுக்கு சுய தொழிலாக தையல் தொழில் தொடங்குவதற்கு ரூ.2,50,000க்கான வங்கி கடனுதவியும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.51,95,053 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்களாகிய நீங்கள் அரங்குகளை பார்வையிட்டு தங்களது தொழில் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொது மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியவை செய்யப்படுகிறது. பொதுமக்கள், பெரியோர்கள் எல்லோரும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை வாயிலாக மருத்துவர்களிடம் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
இம்மருத்துவ முகாமில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான நோய்கள் கண்டறியப்படுபவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மருத்துவர்களிடம் முறையாக கேட்டறிந்து தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, அரசின் பல்வேறு துறை சார்பில் ஒருங்கிணைந்து செயல்படுத்தக்கூடிய இதுபோன்ற நிகழ்வுகளில் இருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களையும் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் திரு.ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், கானம் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக