விசாரித்து உண்மை தன்மை அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்தும், நகை திருடியவரை கைதும் செய்யவில்லை ! நகைகளையும் மீட்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் அளித்த மூதாட்டி....
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள படப்பார்குளம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரின் மனைவி ( 70 வயது மூதாட்டி ) அப்புகனி. இவர்களுக்கு ஏழு மகன்கள் மற்றும் ஒரு மகள். விவசாய குடும்பம். இதில் கடந்த வருடம் மூதாட்டி அப்புக்கனியின் மகன் ஒருவர் விபத்தில் உயிரிழக்க அடுத்த சில மாதங்களில் கணவர் அருணாச்சலமும் உயிரிழந்து விட்டார். பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்து கொடுத்த பின்னும் யாருடனும் சேராது தனியாக தன் வீட்டில் வசித்து வந்துள்ளார் மூதாட்டி அப்புகனி.
இந்த நிலையில் மகன் மற்றும் தன் கணவர் என இரண்டு உயிரிழப்புகளால் வேதனையில் இருந்த அப்புகனி தன் ஒரே மகள் திருச்சியில் மணமுடித்துக் கொடுத்த நிலையில் அவளது வீட்டில் சென்று சில நாட்கள் தங்கி இருக்கலாம் என கடந்த வருடம் ஏப்ரல் மாதம் புறப்பட்டுள்ளார். அதுநாள் வரை வீட்டில் தனியாக இருந்தபோது அப்புகனியின் தங்கை மகள் மகேஸ்வரி தான் பெரியம்மா அப்புக்கனிக்கு உதவியாக இருந்துள்ளார். மகேஸ்வரி அப்புகனி வீட்டிற்கு அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதனால் அவ்வப்போதுஅப்புகனிக்கு துணையாக இருந்து கவனித்துக் கொண்டது மகேஸ்வரிதான். இதனால் மகள் வீட்டிற்கு செல்லும் போது தன் வீட்டில் தன் மகளின் 50 பவுன் நகை உட்பட இருந்த நகை அனைத்தையும் பீரோவில் பத்திரமாக வைத்து பூட்டி விட்டு சாவியை வீட்டுக்குள்ளேயே மறைத்து வைத்துவிட்டு வீட்டுச் சாவியை அருகில் வசிக்கும் தங்கை மகள் மகேஸ்வரிடம் கொடுத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் திருச்சியில் தன்மகள் வீட்டில் இருக்கும்போது உடல் நலம் சரியில்லாமல் அங்கிருந்தே சிகிச்சை எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 19 ம் தேதி திருச்சியில் இருந்து படப்பார்குளம் வந்துள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் இல்லை. தங்கை மகள் மகேஸ்வரியிடம் கேட்டபோது அவசர தேவைக்காக நகைகளை அடக்க வைத்துள்ளேன், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் விஷம் குடித்து விடுவேன் என பெரியம்மா அப்புகுட்டியை மிரட்டி உள்ளார். சீக்கிரமே நகைகளை வங்கியில் இருந்து திருப்பி தந்து விடுவேன் என கூறி ஏமாற்றியுள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 21.03.25 அன்று விஜயநாராயணம் காவல் நிலையத்தில் மூதாட்டி அப்புக்கனி, தனது தங்கை மகள் மகேஸ்வரி தன் நகைகளை திருடியது குறித்து புகார் அளித்துள்ளார். தொடர்ந்து மகேஸ்வரியை காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் நகைகள் திருடியது குறித்து ஒப்புக்கொண்டுள்ளார் எந்தெந்த வங்கிகளில் அடகு வைத்துள்ளார் என்ற அனைத்து விபரங்களையும் கொடுத்துள்ளார். அனைத்து விபரங்களையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மகேஸ்வரி மீது BNS 306 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இது நாள் வரை மகேஸ்வரியை கைது செய்யவில்லை. நகைகளை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற வேதனையில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் அலுவலகத்திற்கே இன்று நேரில் வந்து மனு அளித்துள்ளார் என அவரது வழக்கறிஞர் பொன் பாண்டி செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி அப்புக்கனி தான் ஏமாற்றப்பட்டது குறித்தும், தன்னுடைய நகைகளை திருடிய மகேஸ்வரி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எனது மகளுக்குரிய நகைகளை மீட்டு தர வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
செய்தியாளர் - திருநெல்வேலி மாடசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக