உதகையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமையும் மூடப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மே 25, 26)ஆகிய இரண்டு நாள்கள் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதற்கேற்றாா்போல, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
காற்றுடன் பெய்த கனமழையால் ஹில்பங்க், படகு இல்லம், மான் பூங்கா, 8-ஆவது மெயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீலகரி மாவட்டத்தில் அதிகனமழை காரணமாக தொட்டபெட்டா, பைக்காரா, பைன்ஃபாரஸ்ட், லேம்ஸ்ராக், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.
தொடா்ந்து அதிகனமழை பெய்து வருவதால் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊசிமலை உள்ளிட்டத் சுற்றுலா தலங்களும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை வரை மூடப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் செல்லக்கூடாது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்புப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இன்று கோத்தகிரி மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா காலனி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது எனவே இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டத்தில் இதுவரை 13 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை தேவையில்லாமல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக