சிவகிரி விவசாய தம்பதி கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் பிடிப்பட்ட 3 பேருக்கு, பல்லடம் அருகே நடைபெற்ற மூவர் கொலை வழக்கிலும் தொடர்பிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகிலுள்ள மேகரையான் தோட்டத்தில் மே 1ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராமசாமி-பாக்கியம் தம்பதி கொடூரமாகக் கொல்லப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் தரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியிலிருந்து 60 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு (மே 17) அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மாதேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகியோரைப் பிடித்து, கோபி அருகில் உள்ள காவல்நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சென்னிமலை பகுதியில் உள்ள அடகுக்கடை ஒன்றில் இவர்கள் அடகுவைத்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பல்லடம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இந்த மூவருக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் காவல்துறை சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழககுரல் இணையதள செய்தியாளர்,
ம. சந்தானம்,
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக