நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பாக இலவச மற்றும் கட்டண கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் வர்த்தகம் மற்றும் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு நகராட்சியாக மாற்றப்பட்ட மானாமதுரை நகராட்சியானது உள்கட்டமைப்பு வசதிகளில் தன்னிறைவு பெறாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் அவசரத்திற்கு சிறுநீர் கழிப்பதற்கு கூட இலவச கழிப்பிடமோ அல்லது கட்டணக் கழிப்பிடமோ இல்லாததால் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் உடல் உபாதைகள் காரணமாக பல்வேறு நோய்த்தொற்று அபாயங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். கூடுதலாக கீழ்கரை தண்ணீர்த் தொட்டி அருகில் இருந்த நகராட்சி கட்டணக் கழிப்பறையும் சரிவர இயங்காத சூழ்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் கட்டணக் கழிப்பறை கட்டிடம் இயங்கி வருகிறது.
மிக முக்கியமாக நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால், மானாமதுரை வார சந்தையின் போது மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கூடும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் கழிப்பறைகளை உபயோகிக்க முடியாமல் உடல் உபாதைகளால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மானாமதுரை நகருக்குள் அடிப்படை கழிப்பறை வசதிகள் பெருமளவு இல்லாததால் மானாமதுரை நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுவெளிகளை பொதுமக்கள் உபயோகிக்கும் அவலநிலையை தடுத்திடவும், நகர விரிவாக்கம் என்பதே குழந்தை பெண்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுதான் என்பதை கருத்தில் கொண்டு, சாலை விரிவாக்கம், அலுவக கட்டிடங்கள் விரிவாக்கம், அலங்கார விளக்குகளோடு முடிந்து விடாமல் பொதுமக்களின் அடிப்படை வசதியான கழிப்பறை கட்டிடங்களுக்கான இடங்களை நகராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தேர்வு செய்து விரைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக