தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவில் இன்று (03.05.2025), மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப்பயணமாக மாற்றும் நோக்கத்தில், 'ஏனென்று கேள்' எனும் தலைப்பில் நடைபெறும் கோடை கால அறிவியல் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:-
பள்ளி மாணவர்கள் கோடை கால விடுமுறை நாட்களை பயனுள்ள நேரமாக கழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, யாராக இருந்தாலும் எந்தஒரு செயல்களிலும் ஏன் என்ற கேள்வி எழுப்ப வேண்டும்.
அப்போது தான் அதன் முழுமையான கருத்துக்களை தெரிந்து கொள்ள முடியும். அந்தவகையில், அறிவியல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் மூலமாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக இந்த கோடைகால பயிற்சி முகாம் அமையவுள்ளது. இந்த அறிவியல் பூங்காவில் அறிவியலின் பல்வேறு பரிமாணங்கள் மிகச் சிறந்த அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகவும் அற்புதமான ஒரு பூங்கா. வெளிப்புறத்தில் பல்வேறு விதமான அறிவியல் கண்காட்சிகளும், உள் அரங்கத்தில் அறிவியல் சார்ந்த பல்வேறு கருத்துக் கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
அறிவியல் பூங்காவில் உள்ள அறிவியல் சார்ந்த படைப்புகளை பார்த்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு நாளாகும். அறிவியல் கருவிகளின் தத்துவங்கள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? என்று மாணவர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களின் சிறந்த அறிவியல் வல்லுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் மூன்று வாரத்திற்கு பல்வேறு விதமான அறிவியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குட்டித் திரை என்று சொல்லக்கூடிய சிறுவர்களுக்கான அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இன்று தொடக்கமாக, உலகப் புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் அவர்கள் இயக்கிய இன்டர்ஸ்டெல்லர் 2014 என்று சொல்லக்கூடிய அற்புதமான விண்வெளி அறிவியல் பற்றிய திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும், தேசிய அளவில் சாம்பியன்ஷிப் பெற்ற வீரர்களின் வழிகாட்டுதலின்படி சதுரங்கப் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பதிவுசெய்து கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில், கணக்கும் இனிக்கும், கைகளில் கண்ணாம் பூச்சி, அறிவியல் பரிசோதனைகள், ஒரிகமி, கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டம், பலூனில் பொம்மைகள், மந்திரமா தந்திரமா, அறிவியல் கோமாளி, அறிவியல் ஆனந்தம், கதை சொல்வோம் - கதை உருவாக்குவோம், விளையாட்டை கற்போம், நம்புவீர்களா? போன்ற தலைப்புகளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலிருந்து பல்வேறு கருத்தாளர்கள் வருகைதந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
மேலும், குழந்தைகளுக்கு பல்வேறு விதமான சிறு, சிறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்கு பல்வேறு ஆர்வலர்கள் தயாராகவுள்ளனர். ஒவ்வொரு அறிவியல் படைப்புகளுக்கும் பின்னால் இருக்கக்கூடிய பல்வேறு விதமான அறிவியல் தத்துவங்களை குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கவுள்ளார்கள். குழந்தைகள் இந்த அறிவியல் பயிற்சி முகாமினை பயன்படுத்துவதால் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பல்வேறு விதமான அறிவியல் தத்துவங்களில், கிட்டத்தட்ட 80 வகையான அறிவியல் தத்துவங்களை பார்த்து உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்த வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கக்கூடிய இடம் தான் இந்த அறிவியல் பூங்கா. குழந்தைகள் சந்தோஷமாகவும் இனிமையாகவும் கற்பதற்கு ஏதுவாக இந்த கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை அனைத்துக் குழந்தைகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அறிவியல் பூங்காவினை சிறப்பாக பராமரித்து வரும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்த 20 நாட்களில் கற்றுக் கொள்ளும் அறிவியல் பூர்வமான விஷயங்கள் உங்களது குழந்தைகளுடைய அறிவியல் சிந்தனையையும் அறிவியல் சார்ந்த மனப்பான்மையையும் ஊக்கப்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் பெரிய அளவில் உதவும் என்பதில் ஐயம்மில்லை.
எனவே, பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை இந்த கோடைகால அறிவியல் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர். ஐஸ்வர்யா, உதவி ஆணையர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் ஆர்.சாந்தகுமாரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக