சேதுபாவாசத்திரம் அருகே கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முயற்சி... தடுத்து நிறுத்திய சிபிஎம் நிர்வாகிகள்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பெரிய கழனிவாசல் பகுதியில், நீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி நெடுஞ்சாலை துறையினர், சாலையோரத்தில் இருந்த கட்சிக் கொடி மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்த முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த, அப்பகுதியில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மூத்த தலைவர் வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் நவநீதன், கிளைச் செயலாளர் இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம், 'நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொடி மரங்கள் எதையும் அகற்றக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடிதம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள நிலை தான் இருக்க வேண்டும் எனக்கூறி, கட்சிக்கொடி மரத்தினை அகற்ற அனுமதிக்க மாட்டோம்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் - சிபிஎம் ஆவேசப் போராட்டத்தையடுத்து நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரத்தை எடுத்துக் கொண்டு கொடி மரங்களை அகற்றாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக