திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,மூலனூர்,குண்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் ஆடு,மாடு,கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவை மேய்ந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கும்,அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளுக்கும் வெறிநாய்கள் வந்து அவற்றை கடித்து கொன்று வந்தது.இதனால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வந்தது.அதனால் இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.
அதை தொடர்ந்து வெறி நாய் கடியால் இறக்கும் கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி தாராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மூலனூர், குண்டடம் ஒன்றியத்தில் வெறிநாய் கடியால் உயிரிழந்த ஆடுகளுக்கான நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.அதன்படி 8 விவசாயிகளுக்கு 47 ஆடுகளுக்கு ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் தாராபுரம் தாசில்தார் திரவியம்,மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரை தமிழரசு,கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பழனிச்சாமி ,குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர்,பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக