திருப்புவனத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கவும், பின்பற்றவும் தவறும் வாகன ஓட்டிகள், காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா? பொதுமக்கள் கேள்வி.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலை போக்குவரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சீராக இயங்குவதிலும், சாலை போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படுவதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்புவனம் புதூர் முதல் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாக சாலை விதிகளை மதித்து பின்பற்றுவதில்லை எனவும், ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்டோர் சாலை போக்குவரத்து விதிமுறைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மிக முக்கியமாக திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து மதுரை செல்லும் நான்குவழி சாலையை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள டெம்பிள் சிட்டி உணவகத்திற்கு 'ராங் ரூட்டில்', அதாவது நேர் எதிர் திசையில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருவது ஆபத்தின் உச்சம். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து தடுப்பான்களோ, பேரிக்காடுகளோ சரிவர அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் இடது புறம் செல்வதா? வலது புறம் சொல்வதா? என்பது தெரியாது விபத்து ஏற்படும் வகையில் தான்தோன்றித்தனமாக வாகன ஓட்டிகளால் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலைப் போக்குவரத்தில் உள்ள இடையூறுகள் மற்றும் குளறுபடிகளின் காரணமாக வாகன ஓட்டிகள் ஒருவிதமான மன அழுத்தத்தில் இருந்து வருவதும் கண்கூடாக காண முடிகிறது.
பேரிக்காடுகளின் பற்றாக்குறையால் வாகன ஓட்டிகள் ஒழுங்கீனமற்ற முறையில் வாகனங்களை தாங்கள் நினைத்த மாத்திரத்தில் திருப்புவதும், இயக்குவதும், நிறுத்துவதுமாக செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக ஆட்டோ வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களை சாலை போக்குவரத்தில் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை தடுமாறுகிறதா? என்ற கேள்வியையும் பொதுமக்கள் முன்வைத்தனர். இது ஒருபுறம் இருக்க எல்லாவற்றிற்கும் மேலாக வாகன ஓட்டிகள் எதற்காக சாலையில் வாகனங்களை இயக்குகிறோம்? பயணப்படுகிறோம்? பயணிக்கிறோம்? என்பதையே பயணத்தின் போது மெய்மறந்து சாலையின் நடுப்பகுதியில் கேட்பாரற்று பயணம் செய்வது, எதற்காக சாலையின் வெள்ளை கோடுகள் இடப்பட்டிருக்கின்றன என்பதுகூட தெரியாமல் சுய ஒழுக்கமற்று, நிதானத்தை இழந்து வாகனங்களை சாகசமாக நினைத்து இயக்குவது என்ற விபரீத முடிவை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
திருப்புவனம் என்பது பல கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியமாகும். திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் நேர்த்திக்கடன் செலுத்த வந்து செல்வதால் சாலை போக்குவரத்தில் எந்த சமரசமுமின்றி ஒழுங்குபடுத்துவது இன்றியமையாதது. இதில் வார சந்தை என்றால் நிலைமை மிக மோசம் தான். ஏனென்றால் சந்தை எது? பேருந்து நிலையம் எது? என்பதில் குளறுபடி ஏற்பட்டு விடுகிறது. போக்குவரத்து காவல்துறையினர் மிகக் கடுமையாக சாலை போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட ஏதுவாக விழிப்புணர்வு பதாகைகள், அபதார தொகையுடன் கூடிய விழிப்புணர்வு பலகைகள் என பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் சாலைப்போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றிட வழிவகை செய்திட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தபட்சமாக சாலை ஓரங்களில் உள்ள ஆட்டோ வாகன ஸ்டாண்டுகள், சேர் ஆட்டோ வாகன நிறுத்தங்கள், பேருந்துகள் நிறுத்துமிடத்தில் பேருந்துகளை நிறுத்த வலியுறுத்துவது ஆகியவற்றை நெறிமுறைபடுத்தி போக்குவரத்து காவல்துறையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டால் சாலை போக்குவரத்தை சீராக வழி நடத்துவதில் எந்த இடையூறும் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை.
எனவே சாலை போக்குவரத்து விபத்துகளை முன்னெச்சரிக்கையாக தடுத்திட இதுதான் தக்க சமயம் என்பதை கருத்தில் கொண்டு திருப்புவனத்தில் உடனடியாக போக்குவரத்து சாலை விதிமுறைகளை பின்பற்றிடவும், சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்திடவும், போக்குவரத்து வாகனங்களை சாலை போக்குவரத்து விதிகளுக்குள் கட்டுப்படுத்திடவும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு விரைந்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றிட வழிவகை செய்திடவும், வாகன ஓட்டிகளுக்கு பொது விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையத்தை மேம்படுத்திடவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக