ஏரல் - தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் சிறப்பு பார்வையாளராகக் கலந்துகொண்டார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 மே, 2025

ஏரல் - தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் சிறப்பு பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் சிறப்பு பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வாழவல்லான் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (01.05.2025) நடைபெற்ற தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் சிறப்பு பார்வையாளராகக் கலந்துகொண்டார்.  

இக்கிராமசபைக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துல், தேசிய ஊராட்சிகள் தின முக்கியத்துவம் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், 

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II, ஜல்ஜீவன் திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நடத்தப்படும் கிராம சபையில் ஊராட்சி செயலாளரின் பங்கு மற்றும் செயல்பாடுகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தொழிலாளர்துறை - குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துவதை தடுத்தல், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், 

பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதாரம் நடவடிக்கைகள், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் புதுப்பித்தல் குறித்து மக்களுக்கு தெரிவித்தல், பிரதான் மந்திரி சுரகூஷா பீமா யோஜனா விபத்து காப்பீட்டு திட்டம் மற்றும் புதுப்பித்தல் குறித்து மக்களுக்கு விளக்குதல், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
கிராமசபைக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல், பயனாளிகளின் விருப்பத்தின்படி 

பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழிவகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் வருடம்தோறும் 6 கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. 

அந்த வகையில், ஜனவரி 26 குடியரசு தினம், மே 01 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 02 உத்தமர் காந்தியடிகள் பிறந்த தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 01 உள்ளாட்சிகளின் தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இது போன்ற பல்வேறு கூட்டங்களில் உறுப்பினர்களாகிய நீங்கள் கலந்துகொண்டு கிராமத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகளை எடுத்து சிறப்பாக செயல்படுத்தி இருப்பீர்கள். 

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள், பள்ளிக் கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எல்லாம் எடுத்துரைத்தார்கள் அதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்ளை நாடி பயன் பெற்றுக்கொள்ள வேண்டும். 

இந்த ஊராட்சியில் 9 குக்கிராமங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 3782 மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த கிராம சபைக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அரசின் திட்டங்களை எந்த அளவிற்கு செயல்படுத்தி இருக்கிறோம் என்பதையும், திட்டத்தின் பயன்கள் எல்லோரையும் சென்றடைந்து இருக்கிறதா, அனைத்துப் பகுதிகளிலும் சீரான வளர்ச்சி இருக்கிறதா என்பதை முறையாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும். 

மேலும், வருகின்ற நிதியாண்டில் என்ன மாதிரி உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தீட்ட வேண்டும். மேலும், குழந்தைகள் இடைநிற்றலின்றி பள்ளிக்கு செல்வதையும், அங்கன்வாடி மையங்கள் முறையாக செயல்படுவதையும், குழந்தைகளுக்கு முறையாக ஊட்டச்சத்துகள் கிடைப்பது உள்ளிட்டவை குறித்து முறையாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். 

மேலும், இப்பகுதிகளில் குழந்தைகளுக்கு முறையாக ஊட்டச்சத்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, தாய்மார்கள் அன்றாடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், சத்தான உணவுப் பொருட்கள் குறித்தும், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்தும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் தாய்மார்களுக்கு எடுத்துக்கூறி, உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். 

சிறு வயதில் குழந்தைகள் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் ஆரோக்கியமாக இல்லையென்றால் உரிய மூளை வளர்ச்சியும் அறிவுத்திறன் வளர்ச்சியும் குறைந்துவிடும். இதனால் பிற்காலத்தில் அந்த குழந்தை நல்ல படிப்பதற்கோ, நல்ல விதமாக வளர்வதற்கோ வாய்ப்பு இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது.
அரசு என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கூடிய ஒரு அமைப்பாகும். 

அதனடிப்படையில் கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசின் மூலம் என்னென்ன வளர்ச்சிப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து கிராம மக்களின் வாயிலாக அறிந்து அதனை செயல்படுத்துவதுதான் இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கமாகும். அதன்படி, வாழவல்லான் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15வது நிதிக்குழு மானியத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி அமைத்தல், 

பேவர் பிளாக் சாலை அமைத்தல், வாறுகால் வசதி அமைத்தல், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். புதிய திட்டப் பணிகளை விரைவாக தொடங்கி உரிய தரத்துடன் விரைவாக நிறைவு செய்ய வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்களாகிய நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் பற்றியும், திட்டங்களின் பயன்கள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, 

வேளாண்மைப் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் கருத்துக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதனை அனைவரும் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும். எனவே, கிராமத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி தன்னிறைவு அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

மேலும், இந்த கிராம சபைக் கூட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ சேவை அளித்து, மருந்துகள் வழங்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு துத்தநாக சல்பேட், உளுந்து மினிகிட் மற்றும் மண்புழு உர படுக்கை உள்ளிட்ட இடுபொருட்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,25,000க்கான கடனுதவிகளையும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு தாய் நல ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், 

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இக்கிராம சபைக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.யாழினி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசிர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னத்துரை, கிறிஸ்டோபர் தாசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad