தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் வல்லநாடு குறுவட்டம், வல்லநாடு கஸ்பா கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும், உள்ளூர் நீர் ஆதாரம் மூலமாகவும் குளோரினேசன் செய்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அக்கிராமத்தில் தம்பிராட்டி அம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவில் கலந்துகொண்ட மக்களில், ஒரு சிலர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவும், உள்ளூர் நீர் ஆதாரம் மூலமாகவும் குளோரினேசன் செய்து விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தாமல்,
அங்கு இருக்கக்கூடிய குளத்து நீரை பயன்படுத்தியதாகவும், திருவிழாவின் போது மீதம் இருந்த ஆட்டிறைச்சியினை சிலர் உட்கொண்டதாகவும் தெரியவருகிறது.
இதனால் 8 நபர்களுக்கு வாந்தி பேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், 3 நபர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை சீராகவுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறுத்துதலின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் வல்லநாடு கஸ்பா கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்கள் பயன்படுத்திய தண்ணீரை பரிசோசித்தும், உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், வல்லநாடு கிராமத்தில் மருத்துவக் குழு முகாமிட்டு, பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு தேவையான மருத்து சேவைகள் வழங்கி வருகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் முறையாக குளோரினேசன் செய்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக