ஆதிநாதர் ஆழ்வார் கோவிலின் பூப்பந்தல் மண்டபத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினார். இத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மங்களாசாசனம்
5ம் திருநாளான நேற்று மங்களாசாசனம், கருடசேவை நிகழ்ச்சியை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள் கோவில் கருட வாகனங்கள் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு வந்து சேர்ந்தன. மேலும் ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரை கண்ணன். இரட்டை திருப்பதி தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர்,
தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி, மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தல் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் நம்மாழ்வார் நவதிருப்பதி பெருமாள்களை வரவேற்கும் மங்களாசாசனம் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
அதன் பின்னர் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் இடம் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார். மாலை 5 மணிக்கு அனைத்து பெருமாளுக்கும் திருமஞ்சனம். தீபாராதனை. சேவா காலம். தீர்த்தம். சடாரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கருடசேவை
இரவு 10.30 மணிக்கு நவதிருப்பதி பெருமாள்களும் புஷ்ப அலங்காரத்துடன் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தந்த பல்லக்கிலும் ஒன்றன்பின் ஒன்றாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர்.
நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி பேரருளாளர் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் ( எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன், செந்தில் குமார், காளிமுத்து, ராமலட்சுமி, செயல் அலுவலர் சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக