நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஊட்டி வந்துள்ளனர்.
கடந்த மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களு க்கு சனிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு, வருவாய், காவல் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறும்போது, “நீலகிரி மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப் பட்டுள்ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்து, முக்கிய சுற்றுலா தலங்கள் மூடுவது குறித்து ஆலோசனை நடத்தி, பின்னர் அறிவிக்கப்படும். கனமழை பாதிப்புகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 43 கண்காணிப்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்கள் அபாயகரமான இடங்களுக்குச் செல்லக்கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும். கனமழையை ஒட்டி மூடப்படும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக்கூடாது. அபாயகரமான மரங்களின் கீழ் நிற்கவோ அல்லது வாகனங்களை நிறுத்தவோ கூடாது. ” என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக