மானாமதுரை அருகே செய்களத்தூரில் வனத்துறையினர் நாற்றாங்கால் பன்னை அமைக்க உயர்நீதிமன்றம் தடை, வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

மானாமதுரை அருகே செய்களத்தூரில் வனத்துறையினர் நாற்றாங்கால் பன்னை அமைக்க உயர்நீதிமன்றம் தடை, வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு


மானாமதுரை அருகே செய்களத்தூரில் வனத்துறையினர் நாற்றாங்கால் பன்னை அமைக்க உயர்நீதிமன்றம் தடை, வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு .

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செய்களத்தூர் உள்வட்டத்தில் நத்தபுரக்கி, கண்மாய்பட்டி, என். வலசை, சிப்பிப்பிலியேந்தல், சந்திரனேந்தல், நெடுங்குளம், புளிச்சிக்குளம், குருந்தங்குளம், செய்களத்தூர் சின்னக்கண்மாய், வஞ்சிக்குளம் ஆகிய பத்து மழைநீரை மட்டுமே நம்பியுள்ள ஏந்தல் கண்மாய்களுக்குச் செல்லும் வரத்துக்கால்களைத்தடுத்து வனத்துறையினர் நாற்றாங்கால் பன்னை அமைக்க முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இங்குள்ள பத்துக் கண்மாய் பாசன விவசாயிகள் தங்கள் கடும் எதிர்ப்பை முற்றுகை போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்கள் மூலமாக வெளிப்படுத்தினர். ஆனால்


வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் உதவியுடன் வனத்துறையினர் மேற்கண்ட பத்துக் கண்மாய்களுக்குச் செல்லும் வரத்துக்கால்களை மூடி கட்டிடங்கள், முள்வேலிகள் அமைத்து நாற்றாங்கால் பன்னை அமைத்து வந்தனர். இதனால் மேற்கண்ட கண்மாய் விவசாயிகள் சார்பாக இராம. முருகன், ஆ. கோவிந்தராஜ், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் நிஷாபானு - ஸ்ரீமதி ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் செய்களத்தூர் ஊராட்சியில் சிறப்புக் கிராமசபையைக் கூட்டப்பட்டு கிராமப் பொதுமக்களின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே வனத்துறை நாற்றாங்கால் பன்னை அமைக்கலாம், பொதுமக்கள் கிராமசபையில் ஒப்புக் கொள்ளாவிடில் சம்மந்தப்பட்ட புஞ்சை நிலத்தில் எவ்வித வேலையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டது.


அதன் பிறகு கடந்த மார்ச் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப தலைமையில் செய்களத்தூரில் சிறப்புக் கிராம சபைக்கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட கல்குறிச்சி மற்றும் செய்களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பத்துக் கண்மாய் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் வனத்துறையினரின் அத்துமீறல்களால் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முற்றிலும் பாதிக்கப்படுவதாக தங்களின் கடும் ஆட்சேபஙத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். மேலும் வனத்துறை கொண்டு வந்த சிறப்புத் தீர்மானத்தையும் அனைவரும் நிராகரித்தனர்.


அதன் பிறகு கோடை விடுமுறைக்குப் பின்  உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கிராம சபையில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் நாற்றாங்கால் பன்னையை சுந்தரநடப்பில் உள்ள மத்திய நாற்றாங்கால் பன்னைக்கு மாற்றி எடுத்துச் செல்வதாக உறுதியளித்ததன் பேரில் மாண்புமிகு நீதிபதிகள் செய்களத்தூரில் நாற்றாங்கல் அமைப்பதை தடை செய்து மாற்று இடத்திற்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad