திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு, உறவினர்கள் முற்றுகை.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்த பக்தரின் காரில் இருந்த சுமார் 10 பவுன் நகை மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பக்தர் புகார் அளித்ததன் பேரில், விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் தற்காலிக ஊழியர் அஜீத் (29) என்ற இளைஞர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அஜித்தை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் ஈரோடு இரவாக திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அஜித்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பிய உறவினர்கள் தங்களுக்கு உரிய விளக்கமும், நியாயமும் வேண்டி இத்துயர சம்பவம் தாங்க முடியாமல் முற்றுகையில் ஈடுபட்டனர். சம்பவமறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவை சேர்ந்த ஆறு காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். குற்றப்பிரிவு காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளாமல் கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்தியதால்தான் அஜித் உயிரிழந்தார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்கிடையில், இவ்வுயிரிழப்பு பற்றிய விரிவான பல திடுக்கிடும் தகவல்கள் உடல் கூராய்வு அறிக்கைக்கு பின்னர்தான் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக