நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று 2 மாதங்களாக முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று 2 மாதங்களாக முகாம்

 


நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று 2 மாதங்களாக முகாம்


கூடலூர் வட்டம் மேல் கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், செம்பாலா, கோத்தர் வயல் என பல்வேறு பகுதிகளில் யானை உலாவி வருகிறது. பகலில் வனப்பகுதிக்குள் ஓய்வெடுத்து விட்டு, மாலைக்கு பின்னர் நகருக்குள் வர தொடங்குகிறது. பின்னர் வீடுகளை முற்றுகையிடுவது, பயிர்களை தின்று சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தினமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நடுகூடலூர் குடியிருப்பு பகுதியில் மெயின் ரோட்டில் காட்டு யானை நடந்து ஊருக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் ஓடினர். தொடர்ந்து காட்டு யானை மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நடந்து சென்றது.இரவில் ட்ரோன் உதவியுடன் வன காவலர்கள் யானையினை விரட்டி வருகின்றனர்.


இதேபோல் மாக்குமூலாவில் 3 காட்டு யானைகள் பகலில் முகாமிட்டு சர்வ சாதாரணமாக வருகின்றன. பின்னர் இரவில் கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களான தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், தேன்வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து பயிர்களை தினமும் நாசம் செய்து வருகிறது.


விளைநிலம் வழியாக காட்டு யானைகள் மாக்கமூலா பகுதிக்கு சென்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனிடையே பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கார்குடி வனச்சரகர் பாலாஜி, வனவர் தங்கராஜ், வனக்காப்பாளர் வினித் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad