உயிரியல் பாதுகாப்பு சோதனையின்றி மரபணு மாற்ற நெல் இரகங்களை அறிமுகம் செய்த ஒன்றிய அரசு - எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்.
உயிரியல் பாதுகாப்பு சோதனையின்றி மரபணு மாற்ற நெல் இரகங்களை அறிமுகம் செய்த ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் மரபணு மாற்ற நெல் இரகங்களை தடை செய்ய வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் திரு நெல்லை முபாரக் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் முபாரக் அவர்கள் கூறியிருப்பதாவது, "இந்திய ஒன்றிய அரசு, கமலா மற்றும் பூசா DST ஆகிய மரபணு திருத்த நெல் இரகங்களை உயிரியல் பாதுகாப்பு சோதனைகளின்றி அறிமுகப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய பயிர்கள், மக்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. மரபணு மாற்ற பயிர்களை உண்ணும் கால்நடைகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், தமிழக மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ன்மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் காப்புரிமை பெற்றவை என்பதால், விவசாயிகள் விதை சுதந்திரத்தை இழந்து, விதை நிறுவனங்களுக்கு அடிமையாகும் சூழல் உருவாகும். மகரந்தக் கலப்பு மூலம் பாரம்பரிய நெல் இரகங்கள் மாசுபடுவதுடன், இயற்கை விவசாயத்தில் முன்னணியில் உள்ள தமிழகத்தின் விவசாய சூழல் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மரபணு மாற்ற பயிர்களின் தாக்கம் மீளமுடியாதவை என்பதற்கு உலகளவில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
அரசமைப்புச் சட்டப்படி, வேளாண்மையும் மக்களின் உடல்நலனும் மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ளவை. ஆனால், மாநிலங்களின் ஒப்புதல் இன்றி ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பது கூட்டாட்சி முறையை சிதைக்கிறது. மேலும், பெரு வணிக நிறுவனங்கள் காப்புரிமை பெறுவதற்காகவே இத்தகைய மரபணு மாற்றங்களை மேற்கொள்கின்றன, இது விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாக அரசாணை பிறப்பித்து, மரபணு மாற்ற பயிர்கள், விதைகள் மற்றும் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். மேலும், இத்தகைய பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை கண்காணிக்கவும், தடுக்கவும் உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தின் விவசாய பாரம்பரியத்தையும், மக்களின் உடல்நலனையும் பாதுகாக்க, தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்".

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக