திருச்செந்தூரில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு; மின்கம்பத்தில் மோதியதில் வடமாநில தொழிலாளர் படுகாயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

திருச்செந்தூரில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு; மின்கம்பத்தில் மோதியதில் வடமாநில தொழிலாளர் படுகாயம்.

திருச்செந்தூரில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு; மின்கம்பத்தில் மோதியதில் வடமாநில தொழிலாளர் படுகாயம்.

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7 மணி அளவில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் அரசு பேருந்து 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் உடன்குடி நோக்கி சென்றது. இந்த பேருந்தை குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அல்தாப் (48) என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.

பேருந்து திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தை அடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே வந்து கொண்டிருந்தபோது அரசு பேருந்து ஓட்டுநர் அல்தாப்புக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் அரசு பேருந்து சாலையோரம் இருந்து மின்கம்பத்தில் மோதியது. அந்த சமயத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த திருச்செந்தூர் கோவிலில் நடந்து வரும் பணிகளில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர் படுகாயம் அடைந்தார். மேலும் அங்கே நின்ற இருசக்கர வாகனமும் சேதமடைந்தது.

இந்த சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் அல்தாப் பேருந்துக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். படுகாயமடைந்த வடமாநில தொழிலாளர் ஆகிய இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுநர் அல்தாப்பை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் வடமாநில தொழிலாளரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதியதில் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், மின்வாரியத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பத்தில் மோதிய அரசு பேருந்தை மீட்டனர்.

அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதிய சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தாலும் பேருந்தில் பயணம் செய்த 80க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad