5 வருடமாக மூடப்பட்ட மதுபானக் கூடத்தில், பதுக்கி வைத்து சட்டவிரோத மது பாட்டில் விற்பனை -243 மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது, மேலும் தப்பி ஓடிய ஒருவருக்கு வலை வீச்சு.
மதுரையில் 5 ஆண்டு காலமாக மூடப்பட்ட மதுபானக் கூடத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து , சம்பவஇடத்திற்கு சென்ற மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 243 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். போலீசாரை கண்டதும் மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு , மூடப்பட்ட மதுபான கூடத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சிக்கந்தர் சாவடியில் உள்ள மதுபான கூடத்தில் சோதனையிட்டபோது, அங்கு அரசு மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் சோதனையிடுவதை அறிந்த அங்கிருந்த நபர் ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
தொடர்ந்து மது பாட்டில் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த நீதி (52) என்பதும் , தப்பி ஓடியவர் உசிலம்பட்டி அருகே அம்பட்டையன்பட்டியை சேர்ந்த முத்துராமன் என்பதும் இருவரும் சேர்ந்து மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 243 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்து, நீதியிடம் இருந்த 1400 ரூபாய் ரொக்க பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தபோலீசார் , நீதியை கைது செய்து திருமங்கலம் மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து , திருமங்கலம் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய முத்துராமனை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக