மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, சமத்துவபுரம் விளையாட்டு அரங்கத்தில் அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி இன்று (01.08.2025 – ஆடி 16) தொடங்கியது. இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
ஆக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையில் நடைபெறும் இந்த இருநாள் போட்டியில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார். மேலும், இன்று நடைபெற்ற பல்வேறு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்.
இந்த குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
செய்தியாளர்: அருள்.சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக