திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஆக. 14) ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலா நடந்தது.
கொடி பட்டத்தை நிர்வாக அதிகாரிகள் கையாட்சி 3ம்படி ஸ்தலத்தாரிடம் ஒப்படைத்தனர்.
கொடிப்பட்டத்தை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் 1 மணி நேரத்திற்குப் பிறகு சிவன் கோயிலில் வைத்து கொடிப்பட்ட வீதி உலா தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்திப் பெற்ற ஆவணித்திருவிழா நாளை (ஆக. 14) அதிகாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலாவிற்காக வழக்கம் போல 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மண்டபத்தில் உள்ளே வைத்து கொடிப்பட்டத்தை வாங்குவதற்காக 3ம் படி செப்பு ஸ்தலத்தார் ஐயப்பன் அய்யர் மற்றும் ஸ்தலத்தார் மற்றும் கைங்கர்யா சபா நிர்வாகிகள் காத்திருந்தனர்.
அப்போது உறவின்முறை நிர்வாகிகள் கொடிப்பட்டத்தை மண்டபத்தின் வெளியே வைத்து தான் தருவோம் என கூறி புறப்பட்டனர். அதற்கு திருக்கோயில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, பேஸ்கார் ரமேஷ் மற்றும் சபையினர் இது குறித்து இன்று மாலை கூட இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எனவே மண்டபத்தின் உள்ளே வைத்து தர வேண்டும் எனக்கூறினர்.
இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மண்டபம் எங்களுடையது மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையினர் கூட்டமாக அங்கிருந்து வெளியேறி சிவன் கோயிலுக்கு சென்றனர்.
இதையடுத்து அங்கு வந்த திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் உறவின்முறை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் கொடிப்பட்டத்தை பெற்றுக் கொண்டு சிவன் கோயிலில் வைத்து கையாட்சி ஸ்தலத்தாரிடம் கொடுத்தார். அதன்பிறகு சிவன் கோயிலில் இருந்து கொடிப்பட்ட வீதி உலா தொடங்கியது.
நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோவில் பேஷ்கார் ரமேஷ்,திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருக்கோயில் அதிகாரி ASO ராமச்சந்திரன், த்ரிஸ்வதந்திர ஸ்தலத்தார் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி ஐயர், கைங்கர்ய சபை தலைவர் ஆனந்த் ஐயர் மற்றும் ஸ்தலத்தார் சபை,கைங்கர்ய சபை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக