அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி – தாராபுரம் போலீசார் விசாரணை!.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி – தாராபுரம் போலீசார் விசாரணை!..




திருப்பூர் மாவட்டம் 

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் துரதிஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அலங்கியம் ரோடு, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த மனோகரனின் மகன் அஸ்வந்த் (வயது 17), பொள்ளாச்சி நாச்சிமுத்து கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.


 மனோகரனின் அக்கா மகன் காது குத்தும் விழாவில் கலந்து கொள்வதற்காக அஸ்வந்த் மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை புறப்பட்டனர். விழா முடிந்ததும், ஐந்து பேர் இணைந்து தாராபுரம் அருகே அமராவதி ஆற்றுப் பாலம் கீழே குளிக்கச் சென்றனர்.


குளித்துக் கொண்டிருந்தபோது, அஸ்வந்த் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதியில் சென்றுவிட்டார். திடீரென நீரில் மூழ்கி, “என்னை காப்பாற்றுங்கள்!” என்று குரல் எழுப்பினார். அருகிலிருந்த உறவினர்கள் அவசரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பொழுதே அவர் சேற்றுப் பகுதியில் சிக்கி மர்மமான முறையில் காணாமல் போனார்.


உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தீவிர தேடுதல் நடத்தினர். பல நிமிடங்களின் தேடுதலுக்குப் பிறகு, அஸ்வந்தின் உடலை மீட்டெடுத்தனர்.


அவர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.கண்ணீர் மழையில் உறவினர்கள் அஸ்வந்தின் உடல் தற்போது தாராபுரம் அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் கதறி அழும் காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.


தந்தை மனோகரன் கண்ணீர் மல்க,

“ஏற்கனவே எனது மூத்த மகன் ஊனமுற்ற நிலையில் இருக்கிறார். இந்த அஸ்வந்த்தான் குடும்பத்தின் தாங்கு கம்பம். வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தார். இவனும் இப்போது போய்விட்டான். நான் யாரிடம் ஆதரவு தேடுவது?” என்று கூறியபோது, அங்கு இருந்த அனைவரின் கண்களும் கலங்கின.


போலீஸ் விசாரணை இச் சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


அமராவதி ஆற்றில் எச்சரிக்கையின்றி குளிக்கும் பழக்கம் பல உயிர்களை காவுகொண்டு வரும் நிலையில், மீண்டும் ஒரு இளம் மாணவனின் உயிரிழப்பு சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad