விருத்தாசலம், ஆகஸ்ட் 09:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், ரயில் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு (TNCSC) வரும் நெல் மற்றும் உரம் மூட்டைகளை லாரி மூலம் எடுத்துச் செல்ல உள்ளூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஒப்பந்ததாரர் அனுமதி மறுத்ததை எதிர்த்து, கடலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
TNCSC சார்பில் 8 டன்னுக்கு ரூ.598 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், ஒப்பந்ததாரர்கள் ரூ.180 மட்டுமே வழங்கியதாக லாரி உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் புகார் மனு அளித்த நிலையில், பழிவாங்கும் நோக்கில் ஒப்பந்ததாரர்கள், உள்ளூர் மற்றும் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு நெல், உரம் மூட்டைகளை ஏற்றிச் செல்ல அனுமதி மறுத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சங்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் மகேஷ், ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் நடத்தினர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக