திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,
வருகின்ற செப்டம்பர் 11 ஆம் தேதி “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எனும் பிரச்சாரத்திற்காக அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தாராபுரம் வருகை தர உள்ள நிலையில், அந்தக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த 316 பேர் தங்களை விலக்கிக் கொண்டு திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழா இன்று மாலை, தாராபுரம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் கலையரங்கில் நடைபெற்றது. தாராபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுகச் செயலாளர் இல். பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக அதிக ஆதரவாளர்கள் கொண்ட பகுதியாக கருதப்படும் நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து கிளையில் 38 பேர், தெக்காலூர் கிளையில் 112 பேர், தெக்காலூர் ஏ.டி. காலனி பகுதியில் 9 பேர், நஞ்சியம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் 106 பேர் என மொத்தம் 316 பேர் ஒரே சேர திமுகவில் இணைந்தனர்.
இதில் முக்கிய பொறுப்பாளர்களான நஞ்சியம்பாளையம் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் மற்றும் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜன். அமராவதி அணை பாசன வாய்க்கால் சங்க முன்னாள் தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் நாச்சிமுத்து, தெக்காலூர் அதிமுக கழக கிளைச் செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் புஷ்பா, சின்னச்சாமி உள்ளிட்டோர் அடங்குவர்.
அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்திலேயே இந்த அளவிலான பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பது, எடப்பாடி பழனிச்சாமி தாராபுரம் வருகைக்கு முன்னதாகவே அக்கட்சியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக