திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச் சாலை கண்ணன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில், ஊழியர்கள் வாடிக்கையாளரை திட்டியும் மொபைலை பறித்தும், போலி பில் தயாரித்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறி தர்ணா.
சம்பவம் தொடர்பாக, தாராபுரம் பொள்ளாச்சி சாலை சி.அம்மாபட்டி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த அர்ஜுன் (32) அவரின் மனைவி பானுப்பிரியா (28) மற்றும் அவர்களது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர், இன்று மதியம் அந்த நிறுவன அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
மொபைல் வாங்கிய பானுப்பிரியாவுக்கு அதிர்ச்சி
கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி, பானுப்பிரியா தாராபுரம் அருகே பிரபல மொபைல் கடையில் 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விவோ Y300 5G மொபைல் வாங்கினார். அப்போது முன்பணம் 2,000 ரூபாய் செலுத்தி, மீதியை மாதாந்திர தவணை முறையில் கட்டும் திட்டத்தில் இணைந்தார். தவணைகளை சரியாக கட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சூழலில் தனியார் நிதி நிறுவன ஊழியர் துரை, பானுப்பிரியா வீட்டிற்கு சென்று உடனே நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார். பானுப்பிரியா அடுத்த நாள் அலுவலகத்துக்குச் சென்று முழுத் தொகையையும் அபராத தொகையுடன் செலுத்தியுள்ளார்.
ஆனால், அதிர்ச்சியாக, துரை அவரின் கையிலிருந்த மொபைலை பறித்துச் சென்றுள்ளார். அதுமட்டுமன்றி, இன்னும் ஐயாயிரம் ரூபாய் கட்ட வேண்டும், இல்லையெனில் வழக்கு பதிவு செய்வோம், வக்கீல் பேசுகிறோம், போலீஸ் பேசுகிறோம், கைது செய்து சிறையில் அடைப்போம் என போனில் மிரட்டியுள்ளனர்.
போலி பில், போலி வட்டி
பானுப்பிரியா பணத்தை முழுமையாகச் செலுத்திய பின்னரும், அந்த மொபைலை கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் விற்றுவிட்டதாகத் தெரியவந்தது. அதோடு, "செல்போன் கவர், டெம்பர் கிளாஸ் ஆகியவற்றுக்கு 2,500 ரூபாய் வசூலித்தோம், அதற்கான வட்டி சேர்த்து 5,500 ரூபாய் கட்ட வேண்டும்" என நிறுவன மேனேஜர் சரவணன் கூறியுள்ளார்.
ஆனால், மொபைல் வாங்கும் போது இத்தகைய பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதால், போலி பில் தயாரித்து பணம் பறிக்க முயன்றது வெளிச்சம் வெளிச்சத்திற்கு வந்தது.
காவல்நிலையத்தில் விசாரணை
மனமுடைந்த பானுப்பிரியா, தற்கொலைக்குப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியில், பானுப்பிரியா கணவர் அர்ஜுனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனியார் நிதி நிறுவனம் மேனேஜர் சரவணன், சூப்பர்வைசர் துரை ஆகியோரை போலீசார் விசாரித்தனர். இருவரும் முரணான பதில்களை அளித்ததால், மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு நடந்த விசாரணையில், பானுப்பிரியாவின் மொபைலை விற்றுவிட்டது உறுதி செய்யப்பட்டது. அதனை வருகிற திங்கட்கிழமையே மீட்டு தருவதாக மேனேஜர் சரவணன் உறுதியளித்தார்.
காவல் நிலையம் முன்பு மீண்டும் தர்ணா
எனினும், மொபைல் திரும்ப கிடைக்காததால், பானுப்பிரியா மற்றும் அவரது உறவினர்கள், காவல் நிலையம் முன்பே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் நடந்த இந்த அநீதி, தனியார் நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விளையாட்டாகக் கொண்ட நிறுவன ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக