திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையத்தில் கன்னிவாடி கண்ணந்தை குலத்தார்களின் குலதெய்வமான அருள்மிகு செல்லாண்டியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதிதாக தனிக்கோவில் அமைக்கும் நோக்கில் சூலாயுத ஸ்தாபனம், சித்ராஹார விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆவணி மாதம் 18ஆம் நாள் புதன்கிழமை ஏகாதசி திதி, பூராட நட்சத்திரம், அமிர்த யோகம் ஆகிய சுபநாளில் நடைபெற்ற இந்த விழாவில், மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், சர்பராஜா ஹோமம், நவக்கிரக சாந்தி பூஜைகள், குலதெய்வ ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. பூரணாகுதி பின்பு துலாம் லக்கினத்தில் பிடிமண் ஸ்தாபனம், சூலாயுத ஸ்தாபனம் நடைபெற்று தீபாராதனை, திருவருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதன் ஒரு பகுதியாக கரையூரில் உள்ள நீலாம்பூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் இருந்து மாயனூருக்கு புறப்பட்டு, அங்குள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி நதியில் “பிடிமண் எடுத்தல்” நடைபெற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் 1000 பேர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தகுடம் எடுத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா ஹோமங்களை “சிவாகம செம்மல்” சிவஸ்ரீ மந்திராசல குருக்கள் (ஐம்புக்குட்டி குருக்கள்), தென்சேரிமலை திருக்கோவிலின் “சிவகாம வித்யாநிதி, ஜோதிடஞான பானு” சிவஸ்ரீ ஈசான முத்துக்குமார சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
இவ்விழா, கௌரவ தலைவர் கே.பி. கோவிந்தசாமி தலைமையில் கன்னிவாடி கண்ணந்தை குல பங்காளிகள் சமூகநல அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. டி.குமாரபாளையம், கரையூர், ஆலாம்பாளையம், திருப்பூர் கன்னிவாடி மனக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக