தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்கள் புதுக்கோட்டை பிரதான சாலை ஓரங்களிலும், குளத்து கரைகளிலும் கொட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, புதுக்கோட்டை அருகில் அமைந்துள்ள கோரம்பள்ளம் பாசன குளத்தின் கரையிலும், ராமச்சந்திரபுரம் குளத்தின் கரையிலும் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையோரத்திலும், பெரியநாயகம் பள்ளியில் இருந்து கூட்டாம்புளி சாலைக்கு செல்லும் வழியிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிளறிவிடுவதால், ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன.
இதனால், பெரும் சுகாதாரக்கேடு உருவாகி, பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.குப்பைகளை கொட்டுவதற்கு ஊராட்சிக்கு சொந்தமான இடமோ, புறம்போக்கு இடமோ இல்லாததால், இந்த அவலநிலை ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், போதுமான குப்பைத் தொட்டிகள் இல்லை என்றும், குப்பை அள்ளும் வாகனங்கள் குறைவாக இருக்கிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இதற்கு முன்பிருந்த குப்பைத் தொட்டிகளும், குப்பை அள்ளும் வாகனங்களும் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். குப்பைகளை முழுமையாக அகற்றி, சுகாதாரத்தை பேணிட, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக