திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள இடையன்கிணறு பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் (Phase–III, 2025–2026) கீழ் ரூ. 98.90 இலட்சம் மதிப்பீட்டில், சூரியநல்லூர் ஊராட்சி – இடையன்கிணறு – தாராபுரம் – திருப்பூர் சாலை முதல் குண்டடம் வரை 1.740 கிலோமீட்டர் நீளத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படுகின்றன.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் ல
ராமலிங்கம், மற்றும் பல துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் வருகையின்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையில், பூமி பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் படம் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம்,
“துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை ஏன் வைக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
இது எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்பட்டதால், அங்கிருந்த திமுக நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
பின்னர், விழா சிறப்பாக நடைபெற்று, புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக