அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது, தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு ஆகியோர் பூஜை நடத்துவதற்கான நிர்வாக அனுமதியை காப்பு கட்டிய பட்டருக்கு வழங்கினார். தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முக விலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று மாலை திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் அக். 27ம் தேதி திங்கட்கிழமை மாலை கடற்கரையில் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அக். 28ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
100 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து:
கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில், 100ரூபாய் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக