திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 அக்டோபர், 2025

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது! 

உலகப் புகழ்பெற்ற முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த
 22ம் தேதி தொடங்கியது. சூரசம்ஹார விழா நடந்தது. 

அதை தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு மேல் தெய்வானை அம்பாள் முருகனை மணந்து கொள்ளவேண்டி தவமிருக்க தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தபசு இருந்தார். 

தொடர்ந்து மாலையில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தங்கமயில் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி, திருக்கல்யாண தபசு மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார். 

அதை தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமாளுக்கும் அம்பாள் தெய்வானைக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமியும் அம்பாளும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேர்ந்தனர். 

அங்கு கோவில் வளாகத்திலுள்ள வசந்தமண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் அம்பாள் தெய்வானைக்கும் பால், மஞ்சள், விபூதி, தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்து தீபாராதனையும் நடைபெற்றது. 

தொடர்ந்து சரியாக இரவு 11 மணிக்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ராஜகோபுர வாசலில் முன்பு வைத்து சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் காட்சி அளித்தனர். 

நள்ளிரவு திருக்கோயிலில் வைத்து சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் அம்பாள் தெய்வானைக்கும் வைதீக முறைப்படி திரிஸ்வதந்திரர்கள் மற்றும் வேத வாத்தியார் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர்.

மேலும், திருக்கல்யாண வைபவத்துக்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர். திருக்கல்யாண வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தங்களை வீடுகளில் சுப காரியம் நடைபெறுவதற்காக கோவிலில் நடந்த இந்த நிகழ்வில் மஞ்சள் கயிறை வாங்கி சென்றனர். நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை மறு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்சிகான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் கனகராஜன், இன்னோஸ்குமார் உள்பட போலீஸார் ஈடுபட்டனர். 


தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad