தாராபுரத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

தாராபுரத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது



முதியவரை கல்லால் அடித்து, வயிற்றில் உதைத்து படுகொலை – 8 மாதங்களில் 5வது கொலை சம்பவம்; பொதுமக்கள் பதட்டம்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்.என். பேட்டை வீதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில், நேற்று மாலை கொடூரமான கொலை சம்பவம் நடைபெற்றது.



தாராபுரம் தேவேந்திர தெருவில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ஆறுமுகம் (வயது 70) என்ற முதியவர் நேற்று மாலை அந்த அரசு மதுபானக் கடைக்கு சென்று மது வாங்கியுள்ளார். பின்னர், தனது பெரியப்பா மகன் சுரேஷ் (வயது 53) உடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.


அதே நேரத்தில், தாராபுரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் ராஜா (வயது 27) என்பவரும் அங்கு மதுபானம் அருந்த வந்துள்ளார். அப்போது, தமிழ் ராஜா குடிப்பதற்காக தண்ணீர் கேட்டு, முதியவர் ஆறுமுகம் இடம் கேட்டுள்ளார். அதற்கு, “நாங்கள் குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் போதாது, நீ வேறு பாட்டில் வாங்கிக்கொள்,” என ஆறுமுகம் பதிலளித்துள்ளார்.


இதனால் கோபமடைந்த தமிழ் ராஜா, அங்கிருந்த கல்லை எடுத்து முதியவரை அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஆறுமுகம் மற்றும் சுரேஷ் இருவரும் கடையிலிருந்து வெளியில் வந்து, என்.என். பேட்டை சந்தோஷ் பாத்திரக்கடை வழியாக சென்றபோது, தமிழ் ராஜா அவர்களை பின்தொடர்ந்து வந்து, “டேய் கிழவா! தண்ணி கேக்குறதுக்கு நீ தரலையா? ஏண்டா, தண்ணி கூட ஒருத்தனுக்கு கொடுக்க மாட்டியா?” என்று கோபமாக பேசிவிட்டு, முதியவரை வயிற்றில் உதைத்துள்ளார்.


இதனால் நிலைதடுமாறி விழுந்த ஆறுமுகத்தை, தமிழ் ராஜா தனது செருப்பால் முகத்தில் உதைத்து, பின்னர் காலால் கழுத்துப் பகுதியில் அமுத்தியுள்ளார். மூச்சுத்திணறிய ஆறுமுகம் அங்கேயே மயங்கி விழுந்தார். அதன் பிறகு, தமிழ் ராஜா தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.


சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு, நிலைமையைக் கவலைக்கிடமாகக் கண்ட மருத்துவர்கள், அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள், தாராபுரம்–உடுமலை சாலையில் உள்ள வேலு தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றி சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.


தகவல் கிடைத்ததும், தாராபுரம் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில், குற்றம் புரிந்தவர் காமராஜபுரத்தைச் சேர்ந்த தமிழ் ராஜா என்பதும் உறுதியாகத் தெரியவந்தது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இறந்தவரின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தாராபுரம் 18வது வார்டு பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாவது:

“ஷோபனா கடைச் சந்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் அடிக்கடி சண்டைகள், வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. இது வணிக மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. மதுபானம் அருந்தியவர்கள் சாலையில் நிர்வாணமாக படுத்துக்கொள்வது, பெண்களை அச்சுறுத்துவது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, அந்த மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,” எனக் கோரினர்.


மேலும், “கடந்த எட்டு மாதங்களில் தாராபுரத்தில் இது 5வது கொலை சம்பவமாகும். தாராபுரம் காவல்துறை உரிய முறையில் பணியாற்றுகிறார்களா என்பதை உயர் அதிகாரிகள் ஆராய வேண்டும்,” என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad