தாராபுரம்:அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி கோழி வாகனம் ஓட்டும் டிரைவர் பலி; போலீசார் விசாரணை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

தாராபுரம்:அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி கோழி வாகனம் ஓட்டும் டிரைவர் பலி; போலீசார் விசாரணை



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட மானூர் பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்பது பேர், இன்று மாலை புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் குளிக்கச் சென்றனர். அப்போது, மூன்று நபர்கள் ஆற்றின் சுழல் பகுதியில் மாட்டி தத்தளித்தனர். உடன் இருந்த நண்பர்கள் இருவரை உயிருடன் காப்பாற்றினர்.


இந்த நிலையில், மானூர்பாளையத்தைச் சேர்ந்த ஆரோன் மகன் மணிராஜ் (19), நீரில் மூழ்கி மாயமானார். நண்பர்கள் நீரில் இறங்கி தேடியும் மணிராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.


தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையின் பத்து வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடுதல் நடத்தினர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது இதனால்  தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது இருப்பினும் மீன் வலை நங்கூரம் போன்றவற்றை பயன்படுத்தி இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு, மாலை 6 மணியளவில் மணிராஜின் உடலை மீட்டனர். பின்னர், தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மணிராஜின் உடலை கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினர்.


குளிக்கச் சென்றவர்களில் பெள்ளம்பட்டி மற்றும் மானூர்பாளையத்தைச் சேர்ந்த சபரீஷ்வரன் (18), பரத்ராஜ் (18), சிவா (18), கார்த்திக் (30), மோகன் (24), வீரமணிகண்டன் (20), செந்தில் (43) ஆகியோரிடம் தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தாராபுரம் புறவழிச்சாலை அருகே உள்ள அமராவதி ஆற்றுப் பகுதி, அடிக்கடி இளைஞர்கள் குளிக்கச் செல்வதற்கான இடமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் நீரில் மூழ்கி பலர் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இதுகுறித்து பலமுறை பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தும், இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால், 20-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக ஆர்வலர்கள் கருத்து:

“அமராவதி ஆற்றின் இந்த பகுதியில் தடுப்பு வேலி அமைத்தல், எச்சரிக்கை பலகைகள் பதித்தல், மற்றும் காவல் துறையின் கண்காணிப்பு அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது,” என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


பொதுமக்களின் கோரிக்கை:

“அமராவதி ஆற்றில் குளிக்கச் செல்லும் இடங்களில் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மீட்பு அணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad