நேபாளத்தில் சர்மா ஒலி தலைமையிலான அரசு நீண்டகாலமாக செயல்பட்டு வந்தது. ஆனால், அரசு பொதுமக்கள் மீது எந்தவித அக்கறையும் கொள்ளாமல், அரசியல்வாதிகள் தாங்கள் வகிக்கும் பதவிகளை ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தி வந்தனர். இதனால் நாட்டில் ஊழலும் வறுமையும் பரவலாக நிலவி வந்தது.
அரசின் செயல்பாட்டில் விரக்தி அடைந்த மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஜனசிந்தனை தலைமுறையினர் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால், போராட்டத்தை அடக்குவதற்காக நேபாள அரசு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களையும் தகவல் தொடர்பு வசதிகளையும் முடக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அரசியல்வாதிகளின் வீடுகளையும், அரசு கட்டிடங்களையும் தீ வைத்து தாக்கினர். இதன் தாக்கம் நீதிமன்றத்திற்கும் சென்றது. போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியைவிட்டு விலகினார்.
பின்னர், புதிய இடைக்கால அரசை அமைப்பதற்கான ஆலோசனையில் பல முக்கிய நபர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், மாணவர்களும் இளைஞர்களும் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை இடைக்கால பிரதமராக தேர்வு செய்தனர். அவரின் நேர்மையான தீர்ப்புகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அவரை இந்த பதவிக்குத் தகுதியானவராக ஆக்கியன.
போராட்டக்காரர்கள் தீ வைத்த நீதிமன்றத்திலிருந்தே ஒருவரை நம்பிக்கைக்குறிய தலைவராக தேர்வு செய்திருப்பது, நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையின் வலிமையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் சமீபகாலமாக நீதிபதிகளின் நடவடிக்கைகள் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளன. டெல்லியில் நீதிபதியின் வீட்டில் இருந்து பெருமளவில் பணம் மீட்கப்பட்டது; மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பகத்சிங், சில தீர்ப்புகள் பாரபட்சமாக உள்ளதாக குற்றச்சாட்டும் முன்வைத்தார். மேலும், பல உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதும் அரசின் பரிந்துரையின்பேரில் பதவிகள் ஏற்கின்றனர் என்பதும் விவாதப் பொருளாக உள்ளது.
மக்களின் இறுதி நம்பிக்கை நீதிமன்றமே. அதன் மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டால் ஜனநாயகத்தின் அடித்தளம் சிதையக்கூடும். உண்மையான நீதித்துறை நம்பிக்கை வன்முறையை ஒழித்து, வலிமையான ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்கும் வித்தாகும்.
– வே. சு. மணிகண்டன், வழக்கறிஞர், நிலக்கோட்டை. 📞 9655773598
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக