அரியலூர் நகராட்சி பூங்கா பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல்!, நீதிமன்றத்துக்கே பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக அதிர்ச்சி குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

அரியலூர் நகராட்சி பூங்கா பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல்!, நீதிமன்றத்துக்கே பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக அதிர்ச்சி குற்றச்சாட்டு.


அரியலூர், நவ. 06 -

அரியலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளியேரி மற்றும் எஸ்.ஆர்.நகர் பூங்கா ஆகிய இடங்களில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலின் படி, பள்ளியேரி மேம்பாட்டு பணிக்காக ₹67 லட்சம் ஒதுக்கப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து மேலும் ₹77 லட்சம் செலவிடப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்.ஆர்.நகர் பூங்கா மேம்பாட்டு பணிக்காக ₹59 லட்சம் மற்றும் பின்னர் ₹29 லட்சம் என மொத்தம் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆவணங்களின் படி, பள்ளியேரியில் மினி மாஸ் விளக்குகள், குப்பை தொட்டிகள், மரக்கன்றுகள், 8 மின்விளக்குகள், 606 மீட்டர் நீள கம்பி வேலி, 15 LED விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டதாக நகராட்சி பதிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல், எஸ்.ஆர்.நகர் பூங்காவில் 15 LED விளக்குகள், 15 பேர் உட்காரும் சீட்டிங் அரேஞ்ச்மென்ட், 9 பேர் உட்காரும் கூடுதல் இருக்கைகள், 2 குப்பை தொட்டிகள், 4 விளையாட்டு உபகரணங்கள், மின்சாரம் இணைப்பு ஆகிய பணிகள் முடிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தபோது மேற்கூறிய எந்த பணிகளும் உண்மையில் செய்யப்படவில்லை என்பது வெளிச்சமிட்டுள்ளது. பூங்கா மேம்பாடு எனும் பெயரில் ஆவணங்களில் மட்டுமே பணிகள் முடிந்ததாக காட்டப்பட்டு, அரசு நிதி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதற்கிடையில், தஞ்சாவூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் தானு மூர்த்தி, இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நீதிமன்றத்தில் பொய்யான தகவல்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்துள்ளார் எனவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் மண்டல இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இதுகுறித்து விளக்கம் அளிக்கிறாரா, அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதற்காக அனைவரின் கவனமும் தற்போது திரும்பியுள்ளது. 


© தமிழககுரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad