தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரின் அளவு மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகல் 6 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டில் 11.8 அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் 11.6 அடியும்,கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.7 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது.
மேலும், மருதூர் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 32,209 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 28,450 கன அடியும் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 3000 கன அடி உபரி நீர் உப்பாத்து ஓடையில் வெளியேற்றப்படுகிறது.
மேலும், நாளை (25.11.2025) திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும்,
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதால் தாமிரபரணி ஆற்றில் மிகக் கூடுதலான உபரி நீர் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள்,
கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக