தூத்துக்குடி மாவட்டம் - அத்திமரப்பட்டி - புதுக்கோட்டை பஞ். யூனியன் சாலைகள் சேதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 நவம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டம் - அத்திமரப்பட்டி - புதுக்கோட்டை பஞ். யூனியன் சாலைகள் சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் - அத்திமரப்பட்டி - புதுக்கோட்டை பஞ். யூனியன் சாலைகள் சேதம்

நவ.30, தூத்துக்குடி மாவட்டத்தில் 
கடந்த 2023-ல் பெய்த பெருமழை காரணமாக, கோரம்பள்ளம் குளத்தின் கரையிலும், உப்பாற்று ஓடையின் கரைகளில் பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், ஏராளமான சாலைகள் அரிக்கப்பட்டு, பல ஊர்கள் துண்டிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரை உடைப்புகள் அடைக்கப்பட்டு, சாலைகள் சரி செய்யப்பட்டன.

மேலும் இந்த வகையில், கோரம்பள்ளம் 24 மடை கண்மாய் அருகே உப்பாற்று ஓடை தெற்கு கரையில் ஏற்பட்ட உடைப்பால் துண்டிக்கப்பட்ட அத்திமரப்பட்டி - புதுக்கோட்டை சாலை, தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு, புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது..
      
இந்நிலையில், 24 மடை கண்மாய்க்கும், அத்திமரப்பட்டிக்கும் இடையே போடப்பட்ட சாலையில் 2 இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி மிகவும் சேதமடைந்த நிலையில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக காணப்படுகிறது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான சாகச பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
 
மேலும் இந்த ஆபத்தான பெரிய பள்ளங்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பு, தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் நிர்வாக அதிகாரிகள் உடனே தீவிர கவனம் செலுத்தி, 24 மடை கண்மாய்க்கும், அத்திமரப்பட்டிக்கும் இடைப்பட்ட சாலையில் காணப்படும் பள்ளங்களை சீரமைத்து தர வேண்டும் என அத்திமரப்பட்டி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad